preload preload preload preload

Tuesday, September 2, 2008

காத்தான்குடி றமீஸ் சிறுகதைகள் 05

‘கலைத்துவிட முடியாத நிஷ்டையில் இருந்து அவர் இன்னமும் மீள எழாததால் அவரை மக்கள் விகாரையுடன் நிறுத்திவிட்டு அடிக்கடி சென்று தரிசித்து வந்தனர். நிஷ்டை கலைந்து நடமாடினால் இப்படித்தான் இருக்கும் என்று பார்க்க பிக்குகளை தோற்றுவித்தனர். இதனால், அவர்களையும் நிஷ்டை கலையாத மடத்திலேயே வைத்தனர். கலைத்துவிட முடியாத நிஷ்டை நிலையாத எய்துவிட அவர்களும் பிரயத்தனம் செய்தனர்.’
என்று சிந்தனை செய்தவாறு; அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் அரச மரத்தை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினார்.
‘காற்றைக் கடவுள் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத நீராக்கி அதனை போதி மரத்தினூடாக ஓட விடுவதால் எழும் சப்தமே போதி மரம் புன்னகைத்து நிற்கும் காட்சி’ என்று அவர் எண்ணிக்கொண்டார்.

இதனை நினைத்து ஒரு புன்னகையையும் வாயு மண்டலத்தில் உலவவிட்டார். அது நிஷ்டை கலையாத அவரின் முகத்தில் ஒட்டிக்கொண்டது. மக்கள் பக்தியுடன் கூறினர்.

‘சாது..சாது..சாது’

விகாரையை விட்டு வெளியேறிய அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் விகாரையை உண்டியலைக் கண்டார். உண்டியலைச் சூழ விகாரைக்கு வரமுடியாதவர்கள் விட்டெறிந்த நாணயக் குற்றிகளையும் கண்டார். ‘கலைத்துவிட முடியாத நிஷ்டையை நாணயக் குற்றிகளின் சேர்க்கையினால் எழும் நாதத்தினால் கலைக்க இயலும் என்று நினைத்து என்றோ ஒரு நாள் கடந்துவிட்ட வரலாற்றின் ஒரு பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் ஒருவர் செய்துவிட்ட முயறசியாக அது அமைந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான நாணயக் குற்றிகளின் சேர்க்கை நாதம் இடிமுழக்கம் போல எழுந்து நிஷ்டையை கலைத்துவிடும் என்று எண்ணியிருக்கலாம்.’ என்று நினைத்துக் கொண்டார்.

சிதறிக்கிடந்த நாணயங்களை பொறுக்கி எடுத்தார். என்றுமே திறந்த வாயுடன் இருந்த உண்டியலில் போட்டுவிட நினைத்து அடி எடுத்து வைத்தார்.
பதபதப்பான ஒரு கரம் பற்றிப்பிடிக்க நின்றுவிட்டார். முதுமை ஏறிவிட்ட சாயம் போய்விட்ட ஒருத்தி. களங்கமில்லை என்பதற்காக வெள்ளையுடுத்திருந்தாh. கட்டை விரலும் சுட்டுவிரலும் அவரது கரத்தைப் பற்றியிருக்க ஏனைய விரல்கள் பற்றற்று நீண்டு வளைந்திருந்தது. நிஷ்டை நிலையில் இருப்பவரின் வலது கரமும் அப்படித்தான் இருக்கிறது என்பது சுருக்கென்று தோன்றி மறைந்தது.

‘மகன், மடியில் முடிஞ்சி வச்சிருந்த காசி தொலஞ்சிட்டுது. ஊருக்கு போகவேணும், பஸ்ஸ{க்கு காசில்ல, கொஞ்சம் காசி தாங்க மகன், ஆண்டவன் புன்னியம் தருவான்’
வசியம் செய்யப்பட்டவர் போல கையிலிருந்த காணிக்கைகளை அவரின் இரண்டு கைகளிலும் தினித்தார். அவளின் நன்றியை எதிர்பாராமல் திரும்பிய அவருக்கு கலைத்துவிட முடியாத நிஷ்டையில் இருந்தவரின் மயானக் கண்கள் மலர்ந்து மூடியதான உணர்வு ஏற்பட்டது. நிச்சயமாக கண்கள் திறந்தன என்று அவர் மனது சொன்னது. உள்ளிருந்து வந்த வார்த்தைப் பிரவாகம் மடையுடைத்த போது…

‘தெய்வமே! உன் நிஷ்டையை இப்படித்தான் கலைக்க வேண்டுமா?’

தன் இரு கைகளையும் உயரத் தூக்கி கை கூப்பினார். பின்னால் இருந்து யாரோ தட்டுவது போன்ற ஓரு உணர்வு.

‘இஞ்ச உள்ள போய்க் கும்புடு, பைத்திக் காரனைப் போல ரோட்டில நின்டு கத்துறாய். போ போ வழியில் நின்டு ரோட்ட மறிக்காத’
என்று நகர்ந்தார். ஒரு காவல் அதிகாரி.
அமைதியே குடிகொண்ட கண்களைக் கொண்ட அந்த மனிதர் திரும்பிப் பார்த்தார். கலைத்துவிட்டதாகத் தோன்றிய நிஷ்டை கலைக்க முயடியாததாக மாறிவிட்டதாகத் தோன்றியது.

இரண்டு அடிகள் சென்றுவிட்டு கடைசியாக திரும்பிப் பார்த்தார். யாரோ சிந்திய புன்னகை நிஷ்டை கலையாத அவரின் முகத்தில் முட்டி மோதி ஒட்டியிருக்க வேண்டும்.
மக்கள் சொன்னார்கள்.

சாது…சாது… சாது..

சுபம். மங்களம்.
2004.04.02
_____________________________________________________________________________________

…இப்படியாகத்தானே அந்த நாய்க்கு நீர் புகட்டியதற்காக அந்தப் பெண் சுவனாதியை அடைந்தார். என்று அந்த மகான் கூறிமுடித்தார்.

வரலாற்றின் சிடுக்குகளில் நுழைந்து எப்போதுமே பயணம் செய்ய பிரியம் கொண்ட ஸ்மீற இந்த சம்பவம் பற்றி ஆய்வதற்கு ஆர்வம் கொண்டான். வரலாற்றின் திரும்புகையினை மறுக்கும் அவன் ஒரு தொகுதி நிகழ்வுகளின் மீள் திரும்புகையினை மட்டுமே நிகழ்வதாக உறுதியாக நம்பினான். அதை வெளியிட தைரியம் இல்லாததால் அதை யாரிடமும் சொல்லவில்லை. வரலாறு என்பது காலம் மற்றும் நேரத்துடன் இணைத்துச் சொல்லப்படுவதால் திரும்பவும் அதே காலமும் நேரமும் திரும்ப முடியாது என்பது அவனது வாதம். இதனால் புதிய சகத்திரத்தில் இம்மாதிரி நிகழ்வுகள் நடந்து அவை சுவனபதி முன்னறிவுப்புக்கான தகுதியை பெற்றிருக்கக் கூடுமா என்ற அவனது தேடுகைக்கு பதில் நீண்டகாலம் கழித்துக் கிடைக்கலாம் என்று அவன் நம்பினான். அந்த நம்பிக்கைக்கு அவனது பூமி சாஸ்திர ஞானத்தை மேற்கோள் காட்டி அது பாலைவனமாகி வருவதாகவும் சொன்னான். ஆனால், அவனது இக்கருத்துக்களை சுவடிகளில் பதிந்து பின்னால் வரலாற்று மாணவர்களுக்கு கொடுக்க அவனுடன் துணைக்கு யாரும் இருக்கவில்லை.
இந்த சம்பவங்களை தனது ஏடுகளில் பதிந்துள்ள புலவர்களும் அந்த சம்பவம் குறிப்பாக எந்த நிலத்தில் நடந்தது என்று குறிக்கவும் இல்லை. அந்த சம்பவங்களை தன் சகாக்களுக்கு சொன்ன முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்ற நாமம் கொண்ட தூதரும் அது பற்றிக் குறிப்பிடவில்லை. இதனால் சம்பவம் பொய்க்கவும் வாய்ப்பில்லை. அந்த இடம் பூமியில் எங்காவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்பது ஸ்மீறவின் அதீத நம்பிக்கை.
தன் பயணப் பொதிகளைக் கட்டிக்கொண்டு மத்திய கிழக்கின் பாலை நிலங்களில் அந்த பாழடைந்து போன கிணற்றினை தேடியலைய ஆரம்பித்தான். தன்னை, அழைத்து வந்து பாலைநிலத்தில் விட்டுவிட்டுப் போவதற்கு முன் அவனது பயண வழிகாட்டி அது வடக்கே இருக்கலாம் என ஹேமம் தெரிவித்தான்.

அந்தக் குறிப்புகளுடன் வடக்கு நோக்கி நாற்பது பேரீத்தம் பழங்களும் மூன்று தோற் பைகளில் ஹாஜர் என்ற ஸ்திரீ தன் புத்திரரான இஸ்மாயீலுடன் நீரைத் தேடியலைந்த பொழுது இறைவனின் அனுக்கிரகத்தால் தோற்றம் பெற்ற ‘ஸம் ஸம்’ சுனையில் படித்த நீரையும் எடுத்துக் கொண்டு தன் பயணத்தை ஆரம்பித்தான்.
பயணிக்கத் துவங்கிய மூன்றாவது நாளில் ஒரு ஈத்தம் புற்றின் அருகில் பாலை நிலத்து ஸர்ப்பங்களை தேடியலைந்து கொண்டிருந்த ஒரு தூர்ந்து போன பர்பர் இனத்தவனை அவன் சந்தித்தான். தனது பயண நோக்கத்தை அவனிடம் சொன்னான். அந்த பர்பர் இனத்தவன் சொன்ன தகவல்கள் அவனுக்கு மேலும் ஆர்வத்தைக் கொடுத்தன. மூன்று தலைமுறைகளுக்கு முந்திய தனது முப்பான் அப்படியான ஒரு கிணற்றில் நீர் அருந்தியதாகவும் அந்த நீரின் அனுக்கிரகத்தால் அவரும் சுவனபதியை அடைய வேண்டும் என்றும் சொன்னான். அவனின் நம்பிக்கையின் சரிபிழையினைத் திருத்துவதற்கு ஸ்மீறவுக்கு நேரம் இருக்கவில்லை. ஆனால், அந்த கிணற்றின் இருப்பு மட்டும் மேலும் அவனுக்கு உறுதியானது.

நாற்பது பேரீத்தம் பழங்களும் நீரும் முற்றுப் பெற்ற பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் அவனுக்கு களைப்பு மேலிட்டது. கானல்நீரின் பின்னால் அவன் ஓடிக்கொண்டிருந்தான். இத்தனை நாட்கள் கடந்த பின்னும் அந்த கிணற்றின் இருப்பில் அவன் கிஞ்சிற்றும் ஐயம் கொள்ளவில்லை. பாலைவனப் புயல் அவன் மீது மண்ணை வாரியிறைத்து விட்டிருந்தது. தாக மிகுதியால் அவன் நாக்கை தொங்கப் போட ஆரம்பித்திருந்தான். அவன் போகும் திசையின் எதிர்த்திசையில் நிழல்; சரியத் தொடங்கிய பொழுதுகளில் அவனால் தொடந்தும் நடக்க முடியாது போனது. ஒரு நிலையில் அவன் தன்னிலை மறந்து வீழ்ந்தான். உலகமே அவன் முன் இருண்டு போனது.
அவன் கண்ணில் நீர்த்துளிகள் விழுந்தோடியது. கண்களை திறக்காமலேயே தண்ணீர் தண்ணீர் என்று புலம்பினான். அவனது நாவில் நீர் நிறைந்திருந்தது. பால் குடித்த குழந்தையாக கிறங்கிக் கிடந்தான். அப்போதுதான் அவனுக்குப் பொறி தட்டியது. தான் உயிருடன் இருப்பதாகவும் தனக்கு ஒருவர் நீர் கொடுத்திருக்க வேண்டும் என்றும் விளங்கியது.

சட்டெனக் கண் விழித்தான். சூரியன் ஈட்டியளவு உயரத்தில் மறைந்து கொண்டிருந்தது. தன்னைச் சூழ ஆள் அரவம் இல்லாது கண்டு வியந்தான். அவன் பார்வை இத்துப் போன எலும்புகளில் வீழ்ந்தது. அந்த எலும்புகளுக்குள் ஒரு காலுறையினைக் கண்டான். அந்தக் காலுறையினைத் தொட்டுத் தூக்கினான். கைகள் குளிர்மை கண்டன. உற்றுப் பார்த்த போது அது ஈரளிப்பாக இருந்தது.

விரிந்த பாலைநிலத்தின் நெத்திப்பொட்டாக நின்றிருந்த அவன் தன் ஆய்வின் முடிவை எட்டிவிட்டதாக எண்ணினான். இன்றும் ஈரளிப்புடன் இருக்கும் காலுறையும் இத்துப்போன நாயின் எலும்புகளையும் வைத்து தனது ஆய்வின் முடிவை உலகத்துக்குச் சொல்லலாம் என்று எண்ணினான்.

கற்பனையில் திளைத்த அவனது கரத்தில் இருந்த காலுறை சிறுபிள்ளையாக நழுவியது. பூமியினுள் சட்டெனப் புகுந்து கொண்டது. அவன் மணல் பூமியை தோண்ட ஆரம்பித்தான். காலுறை சண்டுபோல பூமியினுள் அகப்படாது சென்று கொண்டிருந்தது.
பின்னொரு நாளில் ஸ்மீறவின் புகைப்படத்துடன் பிரசுரித்து ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

…நண்டாக மறைந்து சென்று அந்தப் பெண்ணின் காலுறை பாலைநிலத்தில் பரிதவித்து நிற்கும் ஒரு ஜீவனை காக்க மீண்டு வரலாம். பாவப்பட்ட ஒரு ஜீவன் மீது ஒரு பெண் காட்டிய கருணைக்குக் கிடைத்த வெற்றிஅ து. இந்த அகிலத்தின் மீட்சிக்கு அடுத்த ஜீவன்களில் காருண்யம் கொள்ளல் அவசியம்.
_____________________________________________________________________________________

உயிர் ஜீவன்களை மட்டுமே சுமந்து செல்லும் சுழல் இயந்திரத்தின் ஒரு கம்பாட்டுமென்டில் என்னுடைய பெட்டிபடுக்கைகளுடன் சென்று கொண்டிருந்தேன்.
என்னுடைய கம்பாட்மெண்டில் அமர்ந்திருந்வர்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு முன்னிருந்த பிரயாணி தனது இருக்கையில் இருக்கவே சிரமப் பட்டுக்கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் அந்த அங்கலாய்ப்பு முடிவிலியாக வளைந்து நெளிந்துகொண்டிருந்தது.
-‘நீங்கள் வேண்டுமானால் என்னுடைய இருக்கையில் இருக்கலாம்’ என்றேன்.
--‘…….’
---‘அது முடியாது’ என் அருகில் இருந்தவர் சொன்னார்.
தன் பாட்டில் எதிர்ப்புறம் திரும்பியிருந்த அவர் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
---‘அது முடியாது’
-‘ஏன்’
---‘தெய்வ சங்கல்ப்பம்’
-‘பைத்தியம், முட்டாள்தனம், நானும் படித்தவன்தான். இப்படி இருப்பதால்தான் நாமெல்லாம் சோம்பேறிகளாக இருக்கின்றோம்….முதலில் முயற்சி, மறுபடியும் முயற்சி, இறுதியில்தான் தெய்வ சங்கல்ப்பம்’
---‘அதெல்லாம் தனியுலகம்’
-‘அதனை என்னால் ஏற்க முடியாது, நிச்சயம் மனித முயற்சிக்கு ஒரு பெறுமானம் இருக்க வேண்டும்’
---‘உன்னுடைய கருத்துக்கள் மிக அந்நியமாக உள்ளது’
-‘இல்லை, நானோ என்னுடைய கருத்துக்களோ அந்நியமானவை அல்ல’
---‘நீ உன்னைத் திருத்திக்கொள்ளும் கணங்கள் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இக்கணத்த பயணத்திரளில் அந்நியப்பட்டு நிற்கும் நீயும் இதில் இணைந்துகொள்வாய்’
மறுபடியும் நான் முன்னிருந்தவரைப் பார்த்தேன். அசௌகரியத்தின் முடிவிலிகளில் அவர் தொடர்ந்தும் தண்டவாளக் குற்றிகள் போல அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.
அருகே காலியாய் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டிய நான்..
-‘என்னுடைய இடத்தில்தான் வந்து அமர முடியாதென்றால் ஏன் நீங்கள் இந்த இடத்தில் அமரக்கூடாது?’
கேட்கக் கூடாத, பேசக்கூடாத வார்த்தையை உமிழ்ந்தவனைப் போல அனைவரும் என்னை உற்றுப் பார்த்தார்கள். ‘மனிதர்கள் தாம் அறியாதவற்றின் எதிரிகள்’ என்ற பழமொழியை என் மனதில் நினைவு படுத்திக் கொண்டேன்.
---‘உமக்கு முறையான அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை போலும்’
எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்து வந்தது. இத்தனை வருட காலமும் நான் கற்ற கல்வியை ஒரு சம்மட்டியாக மாற்றி அவர் மண்டையில் அடிக்க வேண்டும் போன்றிருந்தது.
---‘நீ இன்னும் உன்னைப் புரிந்து கொள்ளவேயில்லை’ என்றார் என் அருகில் இருந்தவர்.
-‘ஜயா!, நீங்கள் ஏன் என்னையே பகைக்கிறீர்கள். நானும் உங்களைப் போலவே ஒரு பயணி, என் இடம் வரும் வரையில் இந்த வண்டியில்தான் பணயிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு நல்லது செய்ய நினைத்தது ஒரு தவறா?’
---‘செய்ய வேண்டிய இடங்களில் செய்ய வேண்டும், இப்போதல்ல’ என்று சொல்லிய அவர் தொடர்ந்தும் எதிர்ப்புறம் திரும்பி தன் சோலியில் கவனம் கொண்டார். நானும் என்னையே சாந்தப்படுத்தியவனாக சற்று தூங்கலாம் என்று நினைத்தேன். அத்தருணம் நான் இருந்த கம்பாட்டுமெண்டில் புதிதாக ஒரு மனிதர் வந்தார். என் முன் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவர் என்னைப் பார்த்து எதையோ சொல்ல வருபவர் போல எழுந்து வந்து என் அருகில் இருந்த யன்னலைத் திறந்தார்.

“இந்தப் பெயருடைய ஸ்திரீக்கும் இந்தப் பெயருடைய தந்தைக்கும் பிறந்தவனாகிய நீ சாந்தப்பட்ட ஆத்மாவாக மாறிவிடு, உன் இரட்சகன் ஒருவன், அவனே அல்லாஹ{. உன் தலைவர் முஹம்மது. உன் இரட்சகன் யாரென்றும் உன் தலைவர் யாரென்றும் கேட்பவர்களிடம் இதைச் சொல்லிவிடு”

என்ற அசரீரிகள் ஒலித்தன.
நான் புதினப்பட்டேன். என் அருகில் இருந்தவரைப் பார்த்தேன்.
---‘இந்த வண்டியில் ஏறியதும் நீயும் இப்படிச் செய்திருந்தால் இப்படிச் சொல்லுமாறு உன்னையும் கேட்டிருப்பார்கள்……இனியாவது புரிந்துகொள்,
…நீ நித்திய புறப்பாட்டில் இருக்கின்றாய்'
_____________________________________________________________________________________

திருவலையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த தனது பிரியசகி சந்திரலேகாவைப் பார்த்து அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத் தோந்த கலாநிதி நந்தலாலா தரையில் அமர்ந்தவராக சுரைக்காய் விதையின் தோலையுரித்து உள்ளிருந்த பருப்பை இரண்டாக்கி ஒன்றைத் தன் சகியின் வாயிலும் மற்றயதை தன் வாயிலும் இட்டுக்கொறித்தவராக,

-‘என்னுடைய வாழ்வில் புலிகளும், எலிகளும் பெரும் திருப்பத்தையே கொண்டுவந்தன, உனக்கு அது தெரியுமா?’
--“அது நமது கலியாணத்துக்கு முந்தி நடந்திருக்கும்”
-‘ஆமாம், நீ சரியான புத்திசாலி, அழகியும் கூட’
--“நான் எப்பவுமே அழகுதான்”
-‘கலியாணத்துக்குப் பின்னர் என்று பார்த்தால் நான் அந்த வாக்கியத்தை இப்படிச் சொல்லியிருக்க வேண்டும்’
--“எப்படி”
-‘என்னுடைய வாழ்வில் புலிகளும், எலிகளும், பிரியசகியும் புத்திசாலியும் அழகியும் என் மனைவியுமாகிய நீயும் என்னுடைய வாழ்வில் பெரும் திருப்பங்களைக் கொண்டுவந்தவர்கள் அது உனக்குத் தெரியுமா?’
--“தெரியாது!, சுரக்காயை சுண்டல் செய்தா சாப்பிடுவீங்கதானே?”
-‘ஓம், வரிச்சட்டை போட்ட புலிகளும், கறுப்பு எலியும் என் எதிர்காலத்திற்கே உலைவைத்தன’
--“அப்ப நான்!”
-‘இதுவரைக்கும் அப்படியில்லை..ஹா..ஹா..’
--“எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்”
-‘கலாநிதி நந்தலாலாவாகிய எனக்கு ஒரு குறுகிய வாலும், நான்கு கால்களும், பத்துப் பதினைந்து மீசைகளும் உடைய ஒரு கறுப்பு எலியால் சதி பின்னப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர் அது எனது உயர்கல்வி ரிஸால்ட் சீட்டை கடித்துக் குதறியது’
--“ம்ம்..புலிகள் என்னசெய்ததாம்”
-‘வாலில்லாப் புலிகள் என் தகப்பனாரை ரவை நகங்களால் கிழித்துக் குதறின’
--“ம்.. இந்தாங்க@ கறிக்கு உப்புக் காணுமா பாருங்க…”
-‘போதும், ஆக நந்தலாலா சொல்வது இதுதான். புலிகளும், எலிகளும் நமது எதிர்காலத்தையும், இருப்பையும் குறிவைக்கின்றன’
--“அதை ஏன் எழும்பி நின்டு சொல்லுவீங்களாம்! இருந்து சொல்லலாமே!”
-‘எலிகளும் புலிகளும்…”
--“சாப்பாட இப்ப வைக்கவா, சுனங்கனுமா?”
-‘சுனங்கட்டும்’
--“சரி..
என்று கூறிய பரியசகி சந்திரலேகா அப்பால் சென்று விட்டாள். நந்தலாலாவின் கருத்துக்களை அவள் சட்டை செய்யவேயில்லை.
பின்னொரு பொழுதில் அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத்தேர்ந்த கலாநிதி நந்தலாலாவின் கையில் மலத்தீன் பையுடன் எறும்புப் புற்றுக்களைத் தேடி அவற்றை துவம்சம் செய்து கொண்டிருந்தார்.
பிரியசகியும் புத்திசாலியும் அழகியுமான அவரது மனைவி சந்திரலேகா தன் பால்ய சிநேகிதியும் உபாத்தியாயினியுமான லோகமாதாவை வீட்டினுள் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். லோகமாதாவுக்கு விலையேறிவிட்ட பால் சுரணம் இட்டுக் கலக்கிய தேயிலையும், ரூபா 22 பெறுமதியான சாக்குலேட்டு பிஸ்கட்டுகளும் சாப்பிட வைத்திருந்தாள். லோகமாதா அதிகம் சாப்பிடக் கூடாது என்று கலாநிதி நந்தலாலா இறைவனைத் தொழுதார்.
லோகமாதா பின்வருமாறு திருவுளமானாள்
---“ஸ்கூலுக்கு வந்த விஞ்ஞானப் பரிசோதனைப் பொருட்களையெல்லாம் மாத்தின பிறகுதான் நமக்கு அனுப்பியிருக்காங்க, சில பொருட்களை எடுத்துவிட்டார்கள். அவர்களை நம்பவே முடியாது”
சந்திரலேகா சொன்னாள்
--“அதுதான் பாரேன், இந்த மனிசன் படிக்கிற காலத்திலயும் இந்த புலிகளும் எலிகளும் தொல்லை குடுத்திருக்காங்க, அவங்க நம் சமூகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிறாங்க, இப்ப படிப்பு விசயத்திலயும் கை வைக்கிறாங்க”

அண்ட சராசரங்களின் கலைகளையும் கற்றுத் தேர்ந்த கலாநிதி நந்தலாலா சிரித்துக்கொண்டு தொடர்ந்தும் எறும்புகளுக்கு மலத்தீன் தெளித்துக்கொண்டிருந்தார்.
‘அது என் பிரிய சகியும் புத்திசாலியும் அழகியுமான என் மனைவியின் கூற்று’
_____________________________________________________________________________________

ஒர் ஆய்வின் இறுதிப் பத்திகள் பின்வருமாறு முற்றுப் பெறுகின்றன.

‘மரணத்தின் விரிந்த கிளைகளில் உறக்கம் துயில் கொள்வதாகவும் அது அஸ்தமனத்தின் பிந்திய கருக்கலில் மனிதனுடன் சேர்வதாகவும் சேர்மானம் வலுக்கும் போது அது மரணமாக ஜனிப்பதாகவும் சேர்மானம் வலுக்காத கிளை உறக்கம் பிரிகை கொண்டு மரணத்தின் விரிந்த கிளைகளில் சென்று துயிலத் துவங்குவதாகவும் அதனால் மனித சஞ்சாரத்தின் இருப்பு தொடர்வதாகவும் அதற்காகவே இறைவன் துதிக்கப்படுகின்றான் என்றும் இந்த ஸ்தோத்திரத்தின் (ஸ்தோத்திரம் ஆய்வின் முந்திய பத்திகளில் கூறப்பட்டுள்ளது) வியாக்கியானம் சொல்கிறது.

வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே உறக்கம் துலங்காத பிரிகோடாக வரையப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அது வாழ்வுடன் பிணைந்து கொள்ள செய்யும் பிரயத்தனங்களில் முடிச்சு அவிழும் பிணைப்புகள் வாழ்வாக ஜனிப்பதாகவும் உறக்கம் மரணத்தின் கிளைகளில் சாந்தி கொள்வதாகவும், ரௌத்தரம் கொண்ட அதன் பிரயத்தனங்களின் முடிச்சுகள் சிலபோது சாத்தியப்பட்டு விடுவதாகவும் அதன் ஜனனமும் மரணமே என்றும் அந்த ஸ்தோத்திரத்தின் மற்றுமொரு வியாக்கியானம் சொல்கிறது."

“துயிலை ஆசுவாசப்படுத்தி அதனை மரணத்தின் கிளைகளில் மீளவும் சாந்தி கொள்ளச் செய்யும் சர்வலோகத்து அதிபதிக்கு புகழாரம்.”
முற்றும்.

இந்த ஆய்வினை சர்வதேச வாசகர்களாகிய எமக்கு விட்டுச் சென்றுள்ள 'பின் டீன் பைசு' அவரது நாளேடுகளில் இந்த ஆய்வுக்குறிப்புகளை அட்சரங்கள், இலக்கங்கள் மற்றும் கோடுகளின் துணைகொண்டு குறித்து வைத்துள்ளார். தனது ஆய்வினைப் பூரணப்படுத்திவிட்டதாக எண்ணம் கொண்டு உசாத்துணையாகாத குறிப்புகளை எரிப்பதற்கு முன் மேலோட்டப் பார்வையொன்றை அவற்றின் மீது செலுத்தினார். தனது ஆய்வின் முற்றுகையினை கேள்விக்குள்ளாக்குவதோடு அதனை வேறுபரிமாணத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றுமொரு குறிப்பு இருக்கக் கண்டார். குறிப்புகளை கோர்வை செய்கையில் தான் அலட்சியமாக இருந்ததை எண்ணி தன்னை நொந்து கொண்டார்.

மரணம் தழுவிக்கொள்ளாத உறக்கம் பற்றிய துணுக்குகள் அவரது பார்வையை விட்டு நழுவிச்சென்றுள்ளதை எண்ணி கவலை கொண்டார். அந்த குறிப்புகளை தான் எங்கிருந்து பெற்றார் என்ற ஞாபகங்களை மீட்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. அவை வேத நூல்களில் கிடைக்கலாம் என்று அவரது நண்பர் ஒருவர் அவருக்கு சொன்னது நினைப்புக் கொள்ளவே வேதநூல்களின் பக்கங்களில் தனது முடிவுறாத ஆய்வினை முழுமை பெறச் செய்யும் வைராக்கியத்துடன் தேடலானார். கி. பி 600 களின் பிற்பகுதிகளில் தோல், மரப்பட்டைகள், மிருகங்களின் எண்புகள் என்பவற்றில் சுவடுகளாகப் பதியப்பட்ட அறபானிய வேதநூலான புர்கானில் அக்குறிப்புகள் விரவிக் கிடப்பதாக அறிந்து அதனை தேடிப்படிக்கலானார். சுழிவுகள் கொண்ட அறபானிய அக்ஷரங்கள் அவரை புது உலகங்களுக்கு அழைத்துச் செல்வதான உணர்வு மேலிட்டது.

நாட்கள் செல்லச் செல்ல புர்கான் அவரை வசீகரம் செய்து கொண்டே வந்தது. அதனை படிக்கப்படிக்க அதன் வசீகர சக்தி கூடிவருதாக அவர் எண்ணினார். அறபானிய மொழியில் அமைந்த புர்கானின் அர்த்தங்கள் கிளைவிட்டு விரிந்து போவதை அவர் கண்டுகொண்டார். புர்கானின் இந்தியப் பதிப்பு ஒன்றினை புத்தகக்கடையொன்றில் கண்டு அதனை பணம் கொடுத்து வாங்கும்போது புத்தகக்கடை உரிமையாளன் அதன் ஒரு அக்ஷரத்தினை படிப்பது பத்து நன்மைகளை தருவதாக இறைதூதர் சொல்லியுள்ளதாக கூறினான். அதனை விளக்கவுரை ஒன்றின் துணையுடன் வாசிக்குமாறும் அவன் ஆலோசனை கூறினான். கூடவே வரலாற்றாசியர் பின் கஸீர் என்பவரின் பல பாகங்கள் கொண்ட விளக்கவுரை ஒன்றைக் அவரிடம் தந்துவிட்டு புர்கானின் வியாக்கியானம் எல்லையற்று விரியக்கூடியது என்றும் அதனை ஏழுகடல்களை மையாக்கி, உலகில் கிளைத்துப் பரம்பி நிற்கும் மரங்களை ஏழுத்தானியாக மாற்றினாலும் அதற்கான வியாக்கியானத்ததை எழுதித் தீர்த்துவிட முடியாது என்று சொல்லிச் சென்றான்.

மரணம் தழுவாத உறக்கம் ஒலிப்பிரிகைகளின் தாக்கம் கொள்ளாதது. அது செவிப்புலனை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. அது மனிதனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது அந்த அரவணைப்பில் தாயின் பாசம் கசிவதால் எவரும் அபயமளிக்கப்பட்வர்களாக ஆயாசம் கொண்டு துயில் கொண்டுவிடுகின்றனர். மரணம் தழுவாத உறக்கம் தழுவியவர்களை மண் கூட புசிப்பதில்லை என்றும், இறை அனுக்கிரகம் கிடைக்கப்பெற்ற சில யுவர்களும் ஒரு காவல் நாயும் மாத்திரமே இது கால வரை அவ்வுறக்கத்தை சுகித்தவர்கள் என்று கூறும் பின் கஸீரின் குறிப்புகள், அவர்கள் மூன்று சகத்திரங்களுட்பட மேலும் பத்துக்குறைய நூறு ஆண்டுகள் துயில் கொண்டதாகவும் துயில் கலைந்து கண் விழித்தபோது தாம் களைப்பு மேலிட்டு ஒரு சில நாட்கள் வரை அயர்ந்து தூங்கிவிட்டதாக தமக்குள் வியந்து பேசிக் கொண்டதாகவும் அவர்கள் பற்றிய சேதி வெளியில் கசிந்து உலகமே வியந்து நின்ற ஒரு பொழுதுகளில் அவர்கள் தாம் துயில் கொண்ட குகையினுள் சென்று மறைந்து கொண்டதாகவும் அதன் பின் அவர்கள் திரும்ப வரவேயில்லை என்றும் குறிப்புகள் கூறுகின்றன.

இவ்வாறான அநுக்கிரகம் அந்த யுவர்களுக்கு கிடைத்ததன் சூட்சுமத்தினை அறிய ஆவல் மேலிட்டு புர்கானை மேலும் வாசிக்கலானார். பல வருடங்களாக அதனை மீட்டி மீட்டி வாசிப்பதிலேயே காலம் கழித்தார். மரணமும் வாழ்வும் புர்கானில் பக்கங்களில் சிதறவிடப்பட்டிருப்பதனையும் ஆனாலும் அவை எப்போதும் சேர்ந்தே இருப்பதுவும் கண்டு 'வாழ்வும் மரணமும் பூமியல் சிதற விடப்பட்டிருப்பதாகவும் அதில் தடுக்கிவீழ்பவர்கள் ஜனனத்தையும் மரணத்தையும் கண்டு கொள்வதாகவும், ஒரு புதிய தகவல் துணுக்கினை தனது குறிப்புகளில் சேர்த்துக் கொண்டார். தன் வாழ்நாளின் அந்திமக் காலம் வரை மரணம் தழுவாத உறக்கம் ஒரே ஒரு இடத்தில் புர்கானில் இடம் பெறுவதன் சூட்சுமம் அவருக்கு பிடிபடவேயில்லை. அவர் எழுதிய முற்றுப்பெறாத ஆய்வினை புதிய தகவல்களுடன் இணைத்து வெளியிட அவரால் முடியாமல் போய்விட்டது. அவர் புர்கானை ஆய்வு செய்து கொண்டிருந்த காலங்களில் மக்கள் அவரை மறந்துவிட்டிருந்தனர். அவரது மரணம் பற்றிய செய்திகள் கூட உறவினர்கள் வரை மட்டுமே தெரிந்திருந்தது.

'பின் டீன் பைசு' கடைசி வரை தன்னுடன் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தினை படிப்பதற்கு யாரும் இல்லாதபடியால் அதனை நூதன சாலையின் கையெழுத்துச் சுவடிக் கூடத்துக்கு அவரது உறவினர்கள் தந்திருந்தனர். அது மறு பதிப்புப் பெறுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அவரது குறிப்புப் புத்தகத்தின் கடைசிப்பக்கங்களில் மரணம் தழுவாத உறக்கம் என்ற வார்த்தைகள் பல தடவைகள் ஸ்தோத்திரம் போன்று எழுதப்பட்டிருப்பதும் அதன் இறுதியில் நடுக்கம் கொண்டம் கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. முழுமை பெறாத அவரது ஆய்வின் இறுதி வாசகங்களாக அவை இருக்கக் கூடும்.

“.......மரணம் தழுவாத உறக்கம் ஒரு வாசிக்கப்படாத புத்தகம். அது வாசிக்கப்பட வாசிக்கப்பட வாழ்வின் பல பரிமாணங்களும் அதன் நிலையற்ற தன்மையும் புரியப்படுகின்றது. அதன் வாசிப்பின் எல்லையில் சுகந்தம் தரும் உண்மை ஒன்று இருப்பதனை யாரும் புரிந்து கொள்வர். மரணம் தழுவாத உறக்கம் என்ற நூல் வாசிக்கப்பட வாசிக்கப்பட உறக்கம் நீங்கிய வாழ்வு பிறக்கிறது அதுவே மரணம் தழுவாத வாழ்வாக உருக்கொள்கிறது.

No comments: