preload preload preload preload

நீண்ட தெரு

Tuesday, September 2, 2008

எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள் 03

அன்பின் சகோதரர் பர்ஸான்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் 'நீண்ட தெரு' வலைத்தளம் பற்றிய அறிமுகத்தை எனக்கு சகோதரி பஹீமாஜஹான் அனுப்பியிருந்தார்.
அதில் எனது சிறுகதைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லாச் சிறுகதைகளும் திண்ணையில் வெளியானவை. பரவாயில்லையா? http://mrishansharif.blogspot.com இவ்வலைப்பூவில் எனது சிறுகதைகள் உள்ளன.
நன்றி !

என்றும் அன்புடன், எம்.ரிஷான் ஷெரீப்.
-------------

நண்பரின் வேண்டுகோளுடன் அவரின் சிறுகதைகள் 03 இப்போது வலையேற்றம் செய்யப்படுகிறது. சிறுகதைப் பிரதிகளின் தொகுப்பான இந்த வலையில் சிறுகதைகள் பற்றிய நீண்ட உரையாடல் ஒன்றினை தொடர்வதே நோக்காகும். பிரதி வாசிப்பினையும் தாண்டி பிரதிகளை கொண்டு செல்ல முனைகிறேன்.

இத்தளம் பற்றிய அனைத்து விடயங்களையும் பின்னூட்டமாகவே இடுவது திறந்த உரையாடலுக்கு வாய்ப்பை அதிகரிக்கும்.
நன்றி, பர்ஸான்.ஏஆர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?

சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள் காதல் பாடல்களாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

சட்டென்று எழுந்து போர்வையை மடித்துவைத்துவிட்டு தாவணியைச் சரி செய்துகொண்டாள்.விளக்கேற்றினால் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கைகளின் தூக்கம் கலையுமென்று சிறுவயதிலிருந்தே பழகிய இடமாதலால் இருட்டுக்குள்ளும் எதிலும் முட்டிமோதாமல் குசினிக்கு நடந்தவள் அங்கிருந்த சிறு சிம்னி விளக்கைப் பற்ற வைத்து குசினிக்கு ஒளியூட்டினாள்.அடுப்பிலிருந்த குளிர்ந்த சாம்பலையள்ளி உள்ளங்கையில் ஏந்திப் போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தாள்.கடற்காற்று சிம்னி விளக்கை அணைத்து விடுவதிலேயே தன் பலம் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.

நேற்றுக் காலை தம்பி பிளந்து போட்டிருந்த விறகுத் துண்டுகளைப் போட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பினை எரிய வைத்துத் தண்ணீரைக் கொதிக்க வைக்கமுயன்றாள். ஈரலித்திருந்த விறகுத் துண்டுகளிலிருந்து பெரும் புகை கசிந்து குசினியைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது.வேறொரு நாளென்றால் பெரும் எரிச்சலைச் சுமந்தவளாக முணுமுணுத்தபடி இருந்திருப்பாள். ஆனால் இன்று அப்படியில்லை. அவள் மனம் முழுவதிலும் ஸ்ரீதர் வண்ணம் வண்ணமாகக் கனவுகளைப் பூசி , வரப் போகும் வசந்தத்தை எதிர்பார்த்தவாறான மெல்லிசையொன்றை இசைத்துக் கொண்டிருந்தான்.

இருள் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அதன் நீண்ட பெரும் கரங்கள் அவள் வீட்டை , அருகிலிருந்த கடலை, அவளது ஊரை முழு இரவும் ஆட்சி செய்து இன்னும் தன் பிடியில் கொண்டிருந்தது.அவளது இரண்டு தங்கைகளும் தம்பியும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். ஞாயிறு விடுமுறை நாளென்பதால் அவர்களை எழுப்பாமல் தூங்கவிட்டிருந்தாள். முன்னறையிலிருந்து அப்பா இருமும் சத்தம் கேட்டது. அவருக்கும் இவளைப் போல இரவு முழுதும் உறக்கம் இருந்திருக்காது.

செல்வராணி தன் விரலில் பளபளத்த புது மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள். குறைந்தது அரைப் பவுணாவது இருக்கும். அழகிய வடிவத்திலான தங்க மோதிரத்தின் மத்தியில் சிறிய சிவப்புக்கல் பதிக்கப்பட்டிருந்தது.அது எவ்வளவு பெறுமதியானதாக இருப்பினும் அவளுக்கென்ன ? ஒரு ஆண்மகன் முதன்முதலாக ஆசையாக அவள் விரல்களில் அணிவித்தது. இப்படிப்பட்ட ஒரு நாளுக்காகத்தானே அவள் இவ்வளவு நாளும் காத்திருந்தாள். இந்த உலகையே விலையாக்கி அவளிடம் கொடுத்து மோதிரத்தைத் திருப்பிக் கேட்டால் கூட கொடுக்கவே மாட்டாள் என்பதைப் போல மிக ஆசையாக ஒரு புன்னகையோடு அதனையே பார்த்தவாறிருந்தாள்.

தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் சிவப்புத் தேனீர் ஊற்றியெடுத்து கருப்பட்டித் துண்டோடு அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.ஏதோ யோசனையோடு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா இவளை ஏறிட்டுப் பார்த்து எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். திரும்பவும் குசினிக்கு வந்தவள் நேற்றுச் செய்து எஞ்சியிருந்த இனிப்புப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்து அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

அவளுக்குச் சட்டென்று தன் அம்மா நினைவு வந்தது. அவளது சிறுவயதில் ஏதாவது விஷேசங்களின் போது அம்மா இதுபோலச் செய்து அன்பாகத் தருவாள். கடைசித் தங்கையைப் பிரசவித்த அதே நாளில்தான் அம்மாவும் இறந்து போனாள். பிரசவத்திற்காக வீட்டிலிருந்து போகும் போது இவளை அருகில் அழைத்துத் தலையைத் தடவி ' வீட்டைப் பத்திரமாப் பார்த்துக்கோ ராணி ' என்று சொல்லிப் போனது இவள் காதுகளில் இன்றும் எதிரொலிக்கிறது. அம்மா அவளிடம் கடைசியாகச் சொல்லிச் சென்றபடியே இன்றுவரையில் அவள் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள். அருகிலிருந்து பார்க்கத்தான் அம்மா இல்லை.

நேற்று இந்த நேரங்களில் மனதில் எந்த ஆரவாரங்களுமற்று மிகவும் சாதாரணமாகவே எந்நாளையும் போல வளைய வந்தாள். எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னர் அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போன ஸ்ரீதர் வீட்டிலிருந்து 'பெண்ணைப் பிடித்திருக்கிறது.இன்று மாலையே நிச்சயிக்க வருகிறோம் ' என்ற தகவல் கிடைக்கும் வரை தான். மீன் வியாபாரத்திற்காகப் போயிருந்த அப்பாதான் உடனே வீட்டுக்கு வந்து அவளிடம் விடயத்தைச் சொன்னார்.

அவளுக்கு தான் வானத்தில் மிதப்பது போல இருந்தது. எந்தப் பிடிமானமும் அற்ற ஒரு கொடியாகத் தன்னை எண்ணியிருந்தவளுக்கு ஒரு பெருவிருட்சமே படரக் கிடைத்தது போல ஆறுதலாக உணர்ந்தாள். இத்தனைக்கும் அவளைப் பெண் பார்க்க வந்த அன்று ஸ்ரீதரை அவள் ஒழுங்காகப் பார்க்கக் கூட இல்லை.ஏற்கெனவே இருபதிற்கும் மேற்பட்ட வரன்கள் வந்து பார்த்துப் போய்த் தட்டிக் கழித்து இருபத்தெட்டு வயதாகி நிற்கும் தன்னைக் கூட ஒருவர் பார்த்து ஏற்றுக்கொண்டு நிச்சயிக்க வருகிறார் என்பதே செல்வத்தைப் பெயரில் மட்டுமே கொண்டவளுக்கு பேருவகை கொள்ளவும் , அவர் மேல் விருப்பம் கொள்ளவும் போதுமானதாக இருந்தது.கொடுக்கப்பட வேண்டிய சீதன விபரப் பட்டியலும் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் வருகிற விடயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே தங்கைகளுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தி இயன்றவரையில் அழகுபடுத்தினாள்.அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகளை இரவல் வாங்கி வீட்டு முன் சாலையில் போட்டாள். இரண்டு தெரு தள்ளியிருந்த சித்தி வீட்டுக்குத் தம்பியிடம் தகவலனுப்பி சித்தியை வரவழைத்து வருபவர்களை உபசரிப்பதற்காக பலகாரங்கள் செய்தாள்.உடல் மற்றும் மனம் முழுதும் கல்யாணக் களை தாண்டவமாட அவள் இயந்திரமாக இயங்கினாள்.

நிச்சயம் செய்ய வருகிறார்களென்றதும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெரும் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள்.ஆனால் ஸ்ரீதரோடு அவனது பெற்றோரும் , அக்காவும் மட்டுமே வந்திருந்தார்கள். அக்கா குழந்தை எளிமையான அலங்காரத்தோடிருந்த இவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவனது உறவுகளும் இவளது நெருங்கிய சொந்தங்களும் பார்த்திருக்க , மகிழ்ச்சி முகங்கள் சூழ்ந்திருக்க அவளுக்கு அவன் மோதிரம் அணிவித்தான். ஒரு வாலிபனின் கரம் முதன்முதலாகத் தொட்டதில் இயல்பாகவே வெட்கிச் சிவந்தவளை ஸ்ரீதர் ஒரு கணம் இமைக்காமல் பார்த்திருந்தான்.திருமணத்தை வரும் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது.

அவள் வாழ்வினைப் போலவே விடிய ஆரம்பித்திருந்த கடல் வெளியை ஜன்னல் வழியே பார்த்தவாறிருந்தாள். திருமணத்திற்காக வீட்டுக்கு வர்ணம் பூசும் போது துருப்பிடித்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கும் வர்ணம் பூசவேண்டுமென எண்ணிக் கொண்டாள். அப்பா தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளைப் பட்டினியில் போட்டதில்லை.கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஓரளவு சேமித்து வைத்திருந்தார்.அது இது போன்ற நல்ல காரியங்களின் போது பெரிதளவில் உதவும் என்பது சரியாகிப் போயிற்று இன்று.

அவள் காலை உணவை சீக்கிரமாகச் செய்ய ஆரம்பித்தாள். அப்பா முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போவது தெரிந்தது. பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வியாபாரத்துக்குச் செல்வது பகல்வேளையில் தான். அந்த நேரத்தில் தான் புதிதாக மீன்கள் கரைக்கு வரும். அவற்றை ஏலத்தில் வாங்கி சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்றுவருவது அவரது தொழில்.

காலை உணவுவேலைகள் முடிந்ததும் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் தனக்குச் சில உடுப்புக்கள் தைக்கக் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.பூரணி அக்கா வீடு நாலு தெரு தள்ளியிருந்தது. இதுவரையில் எங்கேயும் தனியாகப் போக அப்பா அனுமதித்தது கிடையாது.அவளது எல்லாப் பயணங்களும் தம்பியுடனும் ,அப்பாவுடனுமே நிகழ்ந்திருக்கின்றன.

சமையல் முடிந்ததும் சிறிய சாப்பாட்டு மேசையில் உணவை ஒழுங்குபடுத்தி அப்பாவை அழைத்துப் பரிமாறினாள். அவர் சாப்பிட்டு முடிக்கையில் உடுப்புத் தைக்கப் போகவேண்டுமென்பதைச் சொன்னவளுக்கு எதிர்பாராவிதமாகத் தனியே செல்ல அனுமதி கிடைத்தது. எல்லாம் ஒரு மோதிரம் செய்த மாயம். ஒரு மோதிரம் அவள் வாழ்விலிருந்த சில தடைகளை ஒரு சாவியைப் போலத் திறந்து விட்டிருந்தது.

அவளும் தனது உணவை முடித்துக் கொண்டு ,மேசையை ஒழுங்குபடுத்தி, மீண்டும் முகம்கழுவி வந்தாள்.இருந்ததிலேயே நல்ல ஆடையொன்றை அணிந்து கொண்டவள் முகத்தில் லேசாகப் பவுடர் தடவிக் கொண்டாள். தைக்கப்பட வேண்டிய துணியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு தம்பி,தங்கைகளை எட்டிப் பார்த்தாள். அவர்கள் இன்னும் நித்திரையிலேயே இருக்க விலகியிருந்த போர்வையைச் சரிசெய்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வீதியிலிறங்கி நடந்தாள்.

அவள் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் துணி தைக்கக் கொடுத்துவிட்டு , தனது வீடு நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்த வேளையிலேயே அந்தப் பெருஞ்சத்தம் கேட்டது.

************************************************

எல்லோருடனும் அவள் முகாமிலிருந்தாள்.அப்பாவினதும் , தம்பி , தங்கைகளினதும் சடலங்கள் சிக்கி உடனுக்குடனே புதைக்கப்பட்டன எனக் காற்று வழி வந்த செய்திகள் சொல்லின. அழுதழுதே கண்ணீர் வற்றிப் போன விழிகளிரண்டும் கருவளையங்களைச் சுமந்து சோர்ந்திருந்தன.தொண்டு நிறுவனங்கள் உணவையும் மருந்தையும் வழங்கியவாறு இருந்த போதிலும் அவளுக்கு எதுவும் தேவையற்றதைப் போலவே உட்காந்திருந்தாள். இழப்பின் வலியானது அவளை மிகவும் பாதித்திருந்தது. தூக்கமில்லை .பசிக்கவில்லை. அப்பாவின் பாசமுகம் ,தம்பி,தங்கைகளுடனான செல்லச் சீண்டல்கள் நினைவுகளில் மாறி மாறி இடறிக் கொண்டே இருக்கையில் இப்படியொரு இடர் சூழ்ந்த பொழுதில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டேனோ என்றும் துயருற்றுச் சோர்ந்தாள்.

அவளது வீடு இருந்த சுவடே இல்லையெனப் பேசிக் கொண்டார்கள். இருப்பினும் அப்பாவும் , உடன்பிறப்புகளும் உயிரோடு இருப்பார்களென்ற நம்பிக்கையின் கீற்று அவளுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது.

"ராணி அக்கா, உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க. உங்க பேரைச் சொல்லி விசாரிச்சாங்க "

ஒரு சிறுமி வந்து சொன்னதும் பரபரப்பாக உடனே எழுந்துகொண்டாள்.அங்கிருந்தபடியே முகாம் வாசலை எட்டிப் பார்த்தாள். ஸ்ரீதர் நின்றிருப்பது தெரிந்தது.கால்கள் துவழ முகாம் வாசலுக்கு வேகமாக நடை போட்டாள்.ஸ்ரீதர் இவளை ஏறிட்டுப் பார்த்து " உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் " என்று முகாம் சுவரோரமாக நகர்ந்தான். அவள் மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.

"உன் வீட்டுப் பக்கம் போனேன். வீடு இருந்த அடையாளமே இல்ல. அப்பா, தம்பி,தங்கச்சிங்க எல்லோருமே இல்லாமப் போயிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க. நீ இங்கேயிருக்கிறது இப்பத்தான் தெரிஞ்சது..அதான் ஓடி வந்தேன். "

'ஒரு உறவெனத் தேடி இவராவது வந்திருக்கிறாரே ' என மனம் சிறிது ஆறுதலடைந்திற்று. இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவாறே இருந்தாள். நிலத்தில் எதையோ தேடுவதைப் போலத் தலை குனிந்து கொண்டவன்,
" நம்ம நிச்சயதார்த்தம் நடந்த வேளையிலதான் அபசகுனமா இப்படிச் சுனாமியெல்லாம் வந்திருக்குன்னு என்னோட வீட்டுல நினைக்கிறாங்க. வீட்டுல உள்ளவங்களை மீறி உன்னைக் கட்டிக்கிறது சாத்தியமில்ல. அதான் நம்ம கல்யாணம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். அந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்துட்டேன்னா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவேன் " என்றான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

திண்ணை
மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார்.தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது வெற்றிலை,பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் லேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா,கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன்.இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று.மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று.மழையின் எந்தப் பிரஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது.மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக,நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது.ஊருக்கே பழம் வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு,கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும்.அந்தக் குளிர்மை,மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும்.வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும்.அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை,கதையாகச் சொல்லியிருக்கிறார்.முன்னர் பாய் பின்னுவதற்கும்,அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும்,மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது.முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது.திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த,எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும்.நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும்,அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்து போகவேண்டும்.ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த,வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு.வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி.அழகழகான ரோஜாக்களும்,ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும்.தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும்,அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக்,பிஸ்கட்,இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன்.டீச்சருக்கு நேர்மாறு அவர்.டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை.எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும்.அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது.எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

"ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா?
மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?"
பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும்.நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

"பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர."
மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.மழையும்,திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும்.அவரது பொக்கை வாய் வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும்,திணணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப் பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்?இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்?அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார்.பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக் கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது.புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள்.மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது.சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று,சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும்,என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம்.பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார்.மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர்.நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும்.மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

"மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல"
"அப்படியில்ல மாமி.சரியான வேலை.சனி,ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா,பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு".

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை.இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி,இறக்கி விட்டிருந்தார்.பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை.காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது.ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ?யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ?டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி,இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும்,சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார்.மடக்கக் கூடியதான சிறுகுடையும்,கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும்.காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான்.மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார்.ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார்.அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க,அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி,வாயெல்லாம் வெந்துவிட்டது.டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம்.நாங்களெல்லோரும் பதறிவிட்டோம்.அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் 'எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே' எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

"மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?"
"என்ன மகன்?"
"இல்ல ! டீச்சர்...?"
"ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது.எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது?அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே...?"
"இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே?சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு..."
"அப்டியில்ல மகன்.நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு,இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க.இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க.இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல.பென்ஷன் காசு வருது.புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது.பின்னக் காலத்துக்கு அது போதும்தானே "
மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது.டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது.மாமா,மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன்.திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார்.மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து,நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

அப்துல் றஸாக் சிறுகதை

வீட்டுக் குறிப்புகள் - 19
01.
(கி ழக்கு மாகாணத்திலுள்ள அக்கரைப்பற்று எனும் ஊரில்)

01 பெட்டி சக்கைக்கல் - 1600.00
1/4 பெட்டி கொங்கிறீட் கல் - 7500.00
01 அம்பாறைச் செங்கல் - 6.00
01 லோடு ஆத்துமண் - 2500.00
01 லோடு கடற்கரை மண் - 1100.00
01 பக்கட் சீமெந்து - 800.00
ஒருநாள் மேசன் கூலி (ஒருசோடிக்கு) - 2000.00

மஹிந்தவின் ஆட்சியில் இதுவொன்றும் ஆச்சரியப்படத்தக்க விலையில்லை என சிலிர்த்துக்கொண்டார் ஆதம்பாபா. புதிதாக வீடு கட்ட ஆரம்பித்த நாளில் இருந்து இக்கணம் வரை வியர்வை வடிந்து கசங்கிய தாளினை நூற்றியோராவது தடவையாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டார். அவரது கடைசி மகள் சரீனா சென்ற வருடம் பாவிக்காத ரெட்டை ரூல் கொப்பியின் நடுப்பக்கத்தை கிழித்து எழுதிக் கொடுத்திருந்தாள். நெடுநாள் ஆசையினால் அவரின் மூத்த மகனின் விருப்பத்திற்கேற்ப வீட்டுக்கு ஒரு படம் வரையவேண்டுமென்று ஒத்துக் கொண்டதற்கிணங்க படம் கொண்டுவந்த கையோடு அந்த வீட்டுக் கலைஞன் ஆசுவாசமாகக் குந்தியிருந்து சொன்ன கணக்குகள்தான் இவை. இருபத்து நான்கு வருடங்களுக்கு முன் தான் வீட்டிற்கும் தான் கட்டப்போகும் வீட்டிற்கும் கடக்க முடியாத இடைவெளியாக பணம் ஊதிப்பெருத்திருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டார்.
(சிறுகதையொன்றின் ஆரம்பம்)

02.
"சுனாமிக்கு முதல்லண்டா லேசா ஊட்ட கட்டிரலாம். ஆனா சுனாமிக்குப் பொறகு நெனச்சிம் பாக்கத் தேவல்ல. சாமானுக்கெல்லாம் கங்கெட்ட வெல. அப்பிடி இப்பிடியெண்டு எல்லாத்தயும் வாங்கினாலும் மேசன் சம்பளம் கொடுத்துக் கட்டமாட்டா. நெறய என் ஜீ ஓக்கள் வந்து ஊடுகள் கட்டினதானே. அவிய சம்பளத்த அள்ளிக் கொடுத்து இந்த மேசன்மார பழுதாக்கி ப்போட்டாங்க. நெனச்சநேரம் வந்து நெனச்ச நேரம் போற தொழில். கேக்கிற சம்பளம் கொடுக்கணும், நாள்ச் சம்பளமா? இல்ல ஸ்கெயார் கணக்கா ஆதாயம் எண்டு சொல்ல ஏலாத அளவுக்கு ரெண்டும் வித்தியாசம் தெரியாமப் போச்சி. சம்பளம் தவிர காலச் சாப்பாடு, பகல்ச் சாப்பாடு, தேத்தண்ணி, ரிங்ஸ் செலவெண்டு அதுவேற. ஊடு கட்றத விட சும்மா இருக்கலாம்."
(ஆய்வொன்றிற்கான நேர்காணல்)

03.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சம்பந்தமாக நம்ப முடியாத பல கதைகள் உலவுகின்றன. ஒரு அமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை இன்னொரு அமைச்சர் சீர்குலைத்ததாக சொல்லப்படுவதில் பல நியாயங்கள் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதற்கு முன்னரும் சில திட்டங்கள் இப்படியாக அலைக்கழிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு தரவேண்டுமென அப்பிரதேசத்தில் இருந்த சிங்களவர்கள் கேட்டதாகவும் கதை வந்தது. பாதிக்கப்படாதவர்களுக்கு எவ்வகையிலும் வீடு வழங்க வேண்டியதில்லை என்று சொன்னதற்காக அங்குரார்ப்பண வைபவம் தேரோ ஒருவரின் தலைமையில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு உள்ளானது. இதனால் முஸ்லிம் - சிங்கள கலவரம் ஒன்று தோன்றலாமோ என்ற அச்சம் உருவானது. இப்போது இத்திட்டம் பற்றி பொதுமக்கள் யாரும் எக்கதையும் பேசுவதில்லை.
(பத்திரிகைச் செய்தியொன்று)

04.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான வீட்டு மாதிரிகள் உண்டு. உன்னிப்பாக அவதானித்தால் இம்மாற்றம் எளிதில் புலப்படும். உதாரணம் சொல்வதானால், கல்முனை, சாய்ந்தமருதுவில் உள்ள வீடுகள் அதிகம் கொங்கிறீட் கலவைகளைத் தாங்கியவை. பெரும்பாலும் மாடிகளாக மாறிக்கொண்டு வருபவை. அறைகள் வளைவுகளாக காணப்பட்டு கிணறுகள் போல உயரம் பெற்றுக்கொண்டு போகும். வீட்டின் புறப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அணுவணுவாக அலங்காரம் பெற்றிருக்கும். அறைகளுக்கு மேலே முகடுகளில், உட்புறப் பகுதிகளில் அதிக செலவுடன் அலங்காரங்கள் உருப்பெருத்துக் கொண்டு செல்லும்.

மருதமுனை வீடுகள் சிறியவை. எளிமையானவை. பழமையின் வாசம் தங்கியிருப்பவை. அனேக வீடுகளோடு சேர்த்து ஒத்தாப்பு இறக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின்புறம் இருக்கும் சின்ன இடைவெளிக்குள் பாவனைக்குதவாத பொருட்கள் குவித்து வைக்கப்பட் டிருக்கும்.

பொத்துவில் பிரதேச வீடுகள் களிமண்ணிலிருந்து செங்கற்களுக்கு மாறிக் கொண்டிருப்பவை. உயரம் குறைவானவை. இரட்டைக்கல் வைத்து கட்டப்பட்டிருப் பதை விட ஒற்றைச் செங்கல்லுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வளவின் மையப்பகுதி சார்ந்தே இவை கட்டப்பட்டிருக்கும்
(பிரதேச வரலாற்று நூலொன்றிலிருந்து)

05.
பின்நவீனத்துவ அமைப்புடைய வீடுகளுக்கு முகடுகள் கூர்மையானதாக இல்லை. முகடுகள் அதிகாரத்தின் உச்சவெளிப்பாடாகும். பெருங் கதையாடலின் ஒற்றைத் தன்மையான கூர் முகடுகளைத் தகர்ப்பதற்காகவே இரட்டைக் குறியீPட்டுத் தன்மையுடன் முகடுகள் அமைக்கப்படுகின்றன. நியூயார்க் நகரத்தில் இருக்கும் யுவுரூவு கட்டிடம் இத்தகைய இரட்டைக் குறியீட்டுடன் தோன்றுகிறது. சாதாரண பார்வையில் சொல்வதானல் முகடுகள் இரக்கம், மனிதாபிமான மற்றவை. சிறு பறவையாகிய காகம் கூட அமர முடியாத கூர்முகடுளால் எவ்வித பயனுமில்லை. தட்டையான முகடுகளில் இருக்கின்ற பயன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(பின்நவீனத்துவ கோட்பாட்டுப் பகுதி)

06.
அண்மைக்காலமாக நிதியியல் நிறுவனங்கள் தனிப்பட்ட வீடமைப்பு நிர்மாணங்களுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குவதும் அதிகரித்துள்ளது. 2006 ஆண்டில் முக்கிய வர்த்தக வங்கிகள் ரூ. 34.227 மில்லியன் பெறுமதி கொண்ட 97.983 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. வீடமைப்பு வங்கிகளான அரச ஈட்டு முதலீட்டு வங்கி, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபன வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன 2006 இல், 2005 இன் 22.501 கடன்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 12.187 மில்லியன் கொண்ட 35.137 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. தற்போது எந்தவொரு வங்கியிலும் வீடமைப்புக் கடனை 22 வீதத்திற்கும் குறைவான வட்டியில் பெற முடியா துள்ளது. இந்நிலையில் செலான் வங்கி மட்டும் 17 வீதத்திற்கு வீட்டுக் கடன் வழங்குவதாக பெருமையுடன் பறைசாற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றது.
(மத்திய வங்கியின் ஆண்டறிக்கை)

07.
வீடு பற்றிய விடயத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அக்கறையெடுக்க வேண்டும். ஊருக்குள் வந்த கடல் அலைகளால் நாம் பெற்ற பாடம் வீட்டை திண்மை யுறக் கட்டுவோம் என்பதல்ல. அலைகளின் பெருமூச்சுக்கு வளைந்து கொடுக் கும் ஜப்பான் ரக வீடுகளைக் கட்டுவோம் என்பதுதான். ''உலகெங்கும் தொடரும் நில நடுக்கம் இங்கும் தொடரா தென்பது என்ன நிச்சயம்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி நிற்கும் உலகத் தகடுகள் நாளை இறங்குகின்ற போது நிலம் மெல்ல அதிர்ந்து கொள்ளும்'' என மார்க்சிய செய்தி நிறுவ னங்கள் அறிவித்துக் கொண்டிருக் கையில் முதலாளித்துவ பெரும் போடிகள் கட்டிடப் பொருட் களுக் கான விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(இங்கு மார்ச்சியமும், முதலாளித்துவமும் எப்படி வந்தது?)

1. நிலநடுக்கம் ஏற்பட்டால் கோபுரங்கள் குடிசைகளாகும், குடிசைகள் கோபுரங்களாகும்.
அதுவரை இன்னொரு மார்ச்சியப் புரட்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என சிந்திக்கும் மார்க்சிய
செய்தி நிறுவனங்கள், இன்றே அப்புரட்சியைக் காண பிரச்சாரம் செய்யலாம்.
2. அதீத உற்பத்தியும், ஆடம்பரமும் நிறைந்த கட்டிடப் பொருட்களில் அதிகம் காசு பார்க்கலாம்
என நம்பும் முதலாளித்துவ நிறுவனங்கள் விளம்பரங்களைப் பரப்பி, மக்களின் மோகத்திற்கேற்ப விலைகளை அதிகரிக்கலாம்.
(உள்ளுர் சமூகசேவை அமைப்பொன்றின் ஆய்வறிக்கை)

08.
சனத்தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கத்துடன் வீடுகளுக்கும் நகர உட்கட்டமைப்புக்குமான கேள்வி துரிதமாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது. சனத்தொகை ஆண்டிற்கு 1.1 சதவீதமாக வளர்ச்சி பெறுவதுடன் நகரக் குடித்தொகை 3 சதவீதமான உயர்ந்த வீதத்தினால் வளர்ச்சியடைந்து வருகிறது. 2016 ஆண்டளவில் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட தொகையினர் நகரப்பகுதிகளில் வசிப்பர் என்று மதிப்பீடுகள் காட்டுவதால் நகர உட்கட்டமைப்பில் துரித அபிவிருத்தி தேவைப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளுக்கான புதிய கேள்வி 100.000 அளவில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக 350.000 வீடுகளுக்கான பற்றாக்குறை உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏற்கனவேயுள்ள வீடுகளில் 30 சதவீதமானவளவு (1.3 மில்லியன்) வீடுகள் ஓரளவு நிரந்தரமானவையாக அல்லது திடிரென ஏற்பட்டவையாக அல்லது அவசரமாக கட்டப்பட்டவையாகவும் அல்லது வகைப்படுத்தப்படாதவையாக கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவனவாகவுள்ளன. சுனாமியினால் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்த 114.000 வீடுகளில் அண்மையக்காலம் வரை 78.000 வீடுகளின் கட்டுமானப்பணி பூர்த்தியாக்கப்பட்டுள்ள.
(வீடமைப்பு அமைச்சு)

09.
வீடு. பெ.
1. குடியிருப் பதற்காக (செங்கல், மண் முதலியவற்றால்) ஏற்படுத்தப்பட்டது house. நகரில் சொந்தமாக வீடு கட்டியிருக்கிறார். / வீட்டுவாடகை சற்று அதிகம்.
2: மோட்சம் heaven.
3: (சேதி.) ஒருவர் பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகத்தை முதலாவதாக கொண்டு பண்ணிரண்டு கிரகங்களும் வகுப்படும் இடம் (in ons’s horoscope)
(க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி)

10.
''வீடு கட்டுவது பற்றிய இனவாதக் கருத்தொன்று உங்கள் முன் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள் சகோதரர்களே! நாம் வீடுகளை ஏன் மாற்றினத்தவர் களைக் கொண்டு நாம் கட்ட வேண்டும்? இன்றைய நிலையில் அவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாதென்பதற்கப்பால் நமது பொருளாதாரத்தை அவர்கள் சுரண்டிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? எங்கள் ஊரில் மட்டும் வீடு கட்டும் தொழிலாளர்கள் திரட்டும் ஒரு நாள் சம்பளம் பத்து இலட்சத்தையும் தாண்டுகிறது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? பொதுவாக ஆய்வொன்று செய்யப் பட்டது. இத்தொழில் செய்பவரை 'மேசன்' என்று அழைப்பதைத்தான் நாங்கள் விரும்பவில்லை'' என்று பலர் சொல்கிறார்கள். அப்படியாயின் பெயரை மாற்றுவோம். பெயரில் என்ன இருக்கிறது, ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத் தால்தான் என்ன? என்று சேக்ஸ்பியரின் மேற்கோள் ஒன்று கூட இருக்கிறது. 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரச்சி னை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது நாம் தானே வீடுகளை கட்டினோம்! நமது கலாசாரத்தையும், தனித்துவத்தையும், கட்டிடக் கலை நுட்பங்களையும் வடிவமைப்பதில் இப்போது நாமேன் பின்னிற்கிறோம்? தொழில் வாய்ப்பில்லாமல் அலையும் ஒரு தொகை இளைஞர்கள் வியர்வை சிந்தி தமது உழைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம்தேச பொருளாதார முறையும், அழகியல் முறையும் ஒன்றினையும் இடமான வீடு கட்டுகின்ற பணி பற்றி இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும் சகோதரர்களே!''
(மேடையில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி)

11.
வீடு வரையும் கலைஞர்கள் தாங்கள் வரைவது போல எந்த வீடும் கட்டப்படுவதில்லை என குறைபட்டுக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் கலைஞர்களின் வரைபடத்தை பின்பற்றுகின்ற கட்டிடத் தொழிலாளிகள் ஓரிடத்தில் மட்டும் அதை ரகசியமாக மீறி தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கும் கட்டிட தொழிலாளர்களுக்குமான பூனை - எலிப்பகை ஆதியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி தனக்கு மயக்கம் வரச் செய்த காரணத்தினால் அவ்விருவரையும் விரட்டி விட்டு தனது வீடு கட்டும் பணியை இடை நிறுத்தியிருக்கிறார் அயல்வீட்டுக்காரரொருவர்.
(அயல்வீட்டுக்காரரின் பேச்சு)

12.
பாலுமகேந்திராவின் வீடு என்கின்ற திரைப்படம் வீடு கட்டுவதிலுள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுகின்றது. இது ஒரு திரைப்படமே அல்ல என இப்போதும் விவாதிக்கின்ற நண்பர்கள் உண்டு. படத்தில் வீடு கட்டி முடிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்தான் அவ்வீடு முடிந்திருப்பதாக ஆனந்த விகடனில் வாசிக்கக் கிடைத்து சிலரிடம் காட்டியபோது ஓரளவு சமாதானம் அடைந்தார்கள்.
(சினிமா விமர்சனப் பகுதியொன்று)

13.
வீடு கட்டுகின்ற மேசன் புலியாக இருக்கலாமா? என்ற சந்தேகம் இங்கு எல்லோருக்குமுண்டு. இதனால் ''இரவில் புலி, பகலில் மேசன்'' என்றளவிற்கு ஒரு பழமொழியையே உருவாக்கி விட்டார்கள். இம்முடிவை அவர்கள் எட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சரியான குழப்பநாள் ஒன்றில் வீடு கட்ட வந்த மேசன் ஒருவன்,சக தொழிலாளியைப் பார்த்து ''நல்லா கட்டு மச்சான். இது நாம இருக்கிற வீடுதானே'' என்று சொல்ல அதைக் கீழே இருந்து
கேட்ட வீட்டுக்காரி கத்திக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடியிருக்கிறார்.அன்றிலிருந்து அவர்கள்
யாரும் வேலைக்கு வரவில்லை என்பதோடு வேலை செய்ததற்குமான கூலியைக் கூட பெற்றுக்கொள்ள வில்லை.
2. ஊரில் மேசன்மார் மிகக்குறைவாக வேலைக்கு வருகின்றனர் என்றால் அன்றைக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றதென்று அர்த்தம். இதை 'யாராவது விருந்துக்கு வருகிறாங்களா?
தெத்திக்காட்டு காகம்' என்பது போல ஊர்மக்கள் அடையாளம் கண்டு கொள்வது.
3. மேசன்மார் தங்களுடைய தொழிலுக்கான உபகரணங்கள் வைத்திருக்கின்ற பையை 'ஆயுத பேக்கு' என்றுதான் அழைப்பார்கள். இது கேட்டு துணுக்குற்று எறியப்பட்ட நிறைய குழந்தைகளும்,
பெண்களும் இங்கிருப்பது.
4. சில மேசன்மார் தங்கள் வாயாலேயே கெட்டுப்போய், தாங்கள் செய்த வீர தீரச்செயல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, பெருமைக்காக அவிழ்த்து விடுவது.
5. ஒன்றில் அதிகமாகப் பேசுவது அல்லது ஆழ்ந்த மௌனம் சாதிப்பது
(பயந்த சுபாவமுள்ள ஒரு பொதுமகன்)

14.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சமூகம் வீடு கட்டாமலே இருந்திருக்கிறார்கள். காலையில் சூரியன் கிழக்குப்பக்கம் உதிக்கும்போது பெரும் நிழல்தட்டியை கிழக்குத் திசைநோக்கி சாத்துவதும், மாலையில் மேற்குத் திசைநோக்கி சாத்துவதுமாக அவர்கள் தங்கள் வாழ்நாளை போக்கியிருக் கிறார்கள். வீடு கட்டுவதற்குரிய நாட்களை மிச்சம் பிடித்தால் அந்நாட்களில் இறைவனை வணங்கி நல்லமல் செய்யலாம் என்று இதற்கு காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.
(சமயச் சொற்பொழிவாளர்)

15.
வீடு கட்டுகின்ற தந்தைமார்கள் அதனை ஒரு பொழுதேனும் அனுபவிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இரவு பகலாக கண்விழித்து வீட்டை கடைசியாக பூர்த்தி செய்கின்ற அன்றே தம் பெண் மக்களுக்கு கல்யாணம் வைத்திருப்பதால் அவ்வீட்டை கடைசியாகவும் முழுமையாகவும் அவர்களால் பார்க்க முடிவதில்லை. வேலையின் களைப்பில் வீட்டின் முன் விறாந்தையில் வந்தமரும் தந்தையர் தமது தோள்த் துண்டினால் நிலத்தில் புழுதி தட்டி கொஞ்சம் அமர்ந்து கொள்கின்றனர். பூ.... என்று ஆசுவாசத்தோடு பெருமூச்சு விட்டபடி எங்கும் நெடிது நோக்குகின்றனர். ஒரு தேயிலை அருந்தும் நேரம் தரிக்கின்றனர். மீண்டும் வேலை... வேலை... கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அருகில் இருக்கும் கொட்டகையின் சாக்குக் கட்டிலில் சரிகின்றனர் தனது அடுத்த மகளுக்கு வீடு கட்டும் யோசனைகளுடன்.
(ஐந்து பேருக்கு மூத்த ஒரு பெண்பிள்ளை)

16
தமிழர்கள் வீடுகளை எளிமையாகக் கட்டுகிறார்கள். இதனால் வீட்டைத் துறப்பதையும் போராடுவதையும் சாத்தியமாக்குகிறார்கள். வீட்டிலே போட்டு காசைக் கல்லாக்குவதை விட அதை தங்கமாக உருக்கி வைக்கிறார் கள். முஸ்லிம்கள் வீடுகளை ஆடம்பரமாகக் கட்டுகிறார்கள். இதனால் போராடுவது பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். வங்கிகளில் தமிழர்கள் தங்கத்தையும், முஸ்லிம்கள் வீடுகளையும் அடமானமாக வைக்கிறார்கள்.
(ஒரு முஸ்லிம் தேசப் போராளி)

17.
வீடு மனைவி மக்கள், வீடு வரை உறவு, அட வீட்டுக் வீட்டுக்க வாசப்படி, தெய்வத் தந்த வீடு, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, ஆயிரம் ஜன்னல் வீடு.
(தெருப்பாடகன்)

18.
பொர, வாடி, மண்டபம், செத்த ஊடு, மண்ணூடு, ஆலஊடு, உள்ளுடு, வராந்தா, குசினி, திண்ணை, சாப்பு, ஒத்தாப்பு, புழக்கடை, மரக்கொட்டு, கெணத்தடி, கக்கூசு, கோப்பிசம், கல்லூடு, மெத்த ஊடு, அப்ஸ்ரயார், வீச்சுமரம், துலாக்கால், தயிர்ச்சட்டி, பந்தம், ஊஞ்சல், கூரை, தேன் குடம், வேதுச் சட்டிகள், பசுநெய்ச்சாடிகள், நெல், குரக்கன், சோளம், இறுங்குச் சாக்குகள், கயிற்று உறிகள், கயிற்றுப் பாயசவுகள், உரல், உலக்கை, கொச்சிக்காய் அம்மி, மருந்தரைக்கும் அம்மி, உடைகளைத் தொங்கவிடும் மான்கொம்புகள், மான் தோல் பாய்கள், தூக்கிய புதிர், கதவு, ஜன்னல், அலுமாரி, மேசை, கதிரை, மின்சாரம், சோபா செட், வைப்பர், கப்போட், டி.வி, ஏ.சி, பேன், கொயில், றைஸ் குக்கர், கிச்சன், கட்டிங் பிளேட், வோமர், பிளண்டர், ஹால், போன், டைனிங் டேபிள், கட்டில், அண்டெனா, டிஸ்க், போர்ச், மொட்டை மாடி, அட்டாச் பாத்ரூம், கொம்பியூட்டர், டேங்க், வோட்டர் சப்ளை.
(சமுதாயத்தில் புழக்கத்திலுள்ள பேச்சு வழக்குகள்)

19.
They gave up thir Avurudu, to ensure we celebrate ours. Contrubute to API VENUVEN API Housing Fund. Type API & send 8877. Rs 10/- + Tax p/m.all Procedds go to fund

sender
Mobitel@
Message centre :
+947100103
Sent:
21-Apr-2008
09:39:40
(SMS)

பர்ஸான். ஏஆர் சிறுகதை

www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med

விஞ்ஞான வரலாறு எழுத மறந்த இலங்கை தென்கிழக்கிஸ்தானில் நடைபெற்ற உடற்சில்லுப் பரிசோதனை பற்றிய தேடற்குறிப்புகள்.

நீண்டு சென்றிருந்த கோடையின் பின்னான முதல் மழை எவ்வளவு அருமையாக இருக்கும்?. மிகத் தூரத்திலிருந்து தகிப்புடன் வருகின்ற மழைத்துளி மண்ணில் பட்டுத் தெறிக்கும் தறுவாயை நான் அனுபவிப்பதற்கென்றே கோடையின் உஷ்ணத்தை தாங்கிக் கொள்வேன். ஏன் நீங்களும் கூட அப்படித்தான் என்று நினைக்கின்றேன்.அன்று கிளறிவிடப்படுகின்ற மண்ணின் மணம் மூக்கை அரிப்பதாக நண்பன் எஸ்.சிஹாப் எப்போதும் கூறுவான். ஆனால் அதற்குள் இருக்கும் உணர்வு பிரமாதம் என்று நான் மனதில் நினைத்துக் கொள்வேன்.இந்த மழை தொடர்ந்து மண்ணில் விழுந்து விழுந்து கோணாவத்தையின் இருமருங்கும் வயல்வெளிகளிலிருந்து வெள்ள நீர் ஓடிவந்து தேங்குவதன் அழகே அழகு.மழை நீண்டு கொண்டே போகும்.வயலெல்லாம் ஒளிந்து வாழ்ந்த மீன்கள் கடலின் அருகே வாழ்ந்த கோணாவத்தை மீன்களுடன் சல்லாபிப்பதற் கென்றே இந்த வெள்ளம் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் விதிக்கப்பட்டிருக்கி ன்றது.வரம்பு மீறிப்போனால் கோணாவத்தையின் நீர் கடலிற்கு வெட்டிவிடப்படும் நாள் மீன் விழாவாக தென்கிழக்கிஸ்தானின் இந்தக் கடலோரக் கிராமத்திற்கு அமைவதுவே வழக்கம்.நீண்ட கோடையில் முறுக்கேறி விளைந்து போயிருந்த சகல மீன் வகைகளும் அன்று விழாக்கொண்டாடப்படும் அப்பிரதேச வீடுகளில் ருசிக்கப்படுவதற்காக வெளியூர் உறவினர்களும் நாள் பார்த்து வந்துவிடு வார்கள்.

சேறு மிகுதியான
கறுப்பின் கலவையில் தரையெங்கும் பூத்துக்கிடந்தது. சிலவேளை இதிலிருந்து கனிப்பொருட்களைப் பிரித்தெடுக்க நாம் தவறிவிடுகிறோமோ என்ற நினைப்புடன் ஒரு கையில் கழற்றி எடுக்கப்பட்ட பாதணியுடன் மறுகையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பையோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். மீன்களின் விலை நினைக்க முடியாத உயரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது. நடந்து நடந்து அராபியர் துறையடிக்குச் சென்றபோது வலது கால் பாதத்தின் கீழே வழுவழுப்பான ஏதோவொன்று அகப்பட்டிருப்பதை உணர்ந்தேன். தன் அழகினைப் பறிகொடுத்து நிற்கும் கோணாவத்தையில் கழிவுப் பொருட்கள் மீதமாக அகப்படுவது இயல்பாகிவிட்டதுதானே என்ற நினைப்புடன் அகப்பட்ட நீண்ட நெடிய போத்தலினை சேற்றிலிருந்து பிரித்தெடுத்து பள்ளியின் மதில் மூலையில் போட தூக்கி எடுத்தபோது போத்தலின் மேலே போர்த்தப்பட்டிருந்த சேற்றின் படலம் விலகுவதில் இருந்த அழகினை தற்செயலாகக் கண்டு ஏதோ ஒரு ரசிப்பில் இருந்தேன். அப்போதுதான் அந்த போத்தல் இறுக்கமாய் அடைக்கப்பட்டிருந்ததினைக் காண முடிந்தது. சேற்றுப்படலம் விலகுவதிலிருந்த அழகினையும் மீறி அடைக்கப்பட்ட போத்தல் எனக்குள்ளே ஒரு கிளர்வினை ஏற்படுத்திவிட்டது. வேகமாய் கடலினை நோக்கி ஓடும் வெள்ளத்தினில் அந்த போத்தலினைப் பிடித்து அதன் மேற்புறத்தில் படர்ந்திருந்த சேற்றினை கழுவுவதற்கு எப்படி நினைத்தேனோ தெரியாது. ஆனால் அதற்குள்ளே பழுப்பேறிய மஞ்சள் நிறத்தில் ஏதோ சுருட்டப் பட்டிருந்ததினை உடனே அவதானித்தேன்.

அடைக்கப்பட்ட போத்தலினை முற்றாக கழுவி விட்டு பள்ளியின் குழாய்க் கிணற்றில் மீளவும் சுத்தம் செய்தேன். உம்மா சொன்ன கடலில் மிதந்து வந்த கேத்தலும் பூதத்தின் நினைவும் வந்தபோது சிரிப்பும் வந்து போனாலும் இது என்ன என்ற கேள்வி அச்சத்துடன் கூடவே இருந்தது. மாயாவிக்
கதைகளில் வரும் அச்சமூட்டும் மறைபொருட்களில் எனக்குள் நான் பல இடங்களில் தைரியமிழந்திருக்கிறேன். ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் மர்ம மனிதர்களின் / உயிரிகளின் அடுத்த வினாடிக்கான செயற்பாடுகள் மீது எனக்குள்ள எதிர்பார்ப்பும் அச்சமும் இந்த போத்தலினுள் உள்ள மஞ்சல் தாளில் வருவது நியாயமாகவே இருக்குமென நான் என் மனதிடம் கூறிக்கொண்டேன். என்றாலும் மிக இறுக்கமாக இருந்த பிளாஸ்டிக், பொலிதீன் கலந்த மூடியினைத் திறப்பதில் விரலும் உள்ளங்கையும் நன்றாகவே கஷ்டப்பட்டு விட்டது.

மிக நீண்ட நாட்களிற்கு முன்னரானதாக இந்த மஞ்சல் தாள் இருக்கவேண்டும். கிட்டத்தட்ட என்று ஒரு குறிப்பிட்ட காலத்தினை கூறுமளவு என்னிடம் இதுபற்றிய அறிவு இல்லை. என்றாலும் பிளாஸ்டிக் உபயோகத்தின் ஆரம்ப கட்டமாக இது இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய 2011
ஹிஜ்ரி ஆண்டிற்கும் இந்த மஞ்சல் தாளின் வயதிற்கும் மிகத்தூரம் என்பது மட்டும் புரியக்கூடியதாகவிருந்தது. தாளின் ஆரம்பத்தில் 786 என தொடங்கியது இது ஒரு சோனகன் எழுதியது என்ற நினைவு வந்தது. இந்த எண்களினை பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கிணையாக முன்னொரு காலத்தில் முஸ்லிம்களில் சிலர் பாவித்துள்ளதனை ceylon muslim nation என்ற google group இல் இருந்து காணக்கிடைத்த நினைவு உடனே வந்தது. இது தொடர்பாக ஏராளமான விவாதங்களும் இயக்கங்களும் முஸ்லிம்களிடம் ஹிஜ்ரி 1300 களில் இருந்து சில நூற்றாண்டு காலம் நடந்ததுவாம். ஆனால் 786 ற்குப் பின் வரிசைக்கிரமமாக எழுதப்பட்ட எண்களும் அராபியத் தமிழ் எழுத்துக்களும், குறியீடுகளும் இது ஒரு கேலி என்ற நிலைப்பாட்டினை சற்று எனக்குள் கொண்டுவந்தது என்றாலும் முன்னர் நான் உளவாளியாகச் செயற்பட்டிருந்ததில் அனுபவித்த திரில்களும் இறுகிய சம்பவங்களை பின்தொடர்வதில் இருந்த ஆர்வமும் என்வயது ஓய்விற்கான காலம் என்பதினையும் தாண்டி எனக்குள் இந்த மஞ்சல் தாளின் பக்கம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. மீன் வாங்கலாம் என்று மழையையும் பாராமல் வெளியிறங்கிய நான் அவை அனைத்தையும் மறந்துவிட்டு எனக்குக் கிடைத்த இந்த கிறுக்கல்கள் நிறைந்த தாளுடன் வீடு நோக்கிப் புறப்பட்டேன். இது என்ன? இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? யார் இதனை எழுதி கோணாவத்தையில் போட்டவர்கள்? அப்படிப் போட என்ன காரணம்? இது ரகசியமா? எல்லையற்ற கேள்விகள் எனக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனால் நேரம் இருளிற்கு சொந்தமாக மாற்றப்பட்டு விட்டது. தனிமையில் எனது உம்மாவின் வீட்டில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதால் மின் விளக்குகளை ஏற்ற நான்தான் அங்கு வேண்டும். இதற்கிடையில் நீண்ட மழைகாலம் என்பதால் Solarpower போதியளவும் charge ஆகவில்லை என்ற எண்ணம் இப்போதுதான் வந்தது. பார்ப்போம், முடியுமானவரை இதனைப் பற்றிய தேடலின் ஆரம்பங்கள் எனக்குள் ஒரு வரலாற்றின் தொடக்கம் போல் தென்பட்டது. காலம் கடந்து பல்வேறு வியாதிகளின் சரணாலயமாய் வாழும் எனக்கு மிக நீண்ட நாட்களின் பின் ஒரு கடமை வந்திருப்பதாய் உணர்ந்தேன். என் எண்ணங்கள் மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் நான் மிக ரகசியமாய் இயங்கிய காலத்திற்கு என்னை அழைப்பதுவாய் இருந்தது. ஆனால் திக்கொன்றாய் பறந்துவிட்ட நண்பர்கள் உடனில்லாத போதும் தொழில்நுட்பம் அவர்களை என் அருகிலே வைத்திருக்கிறது. இப்போது இந்த எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள் என்ன என்று நான் கண்டறிவதே பிரதான பணி. மீளவும் ஆய்வுகளின் பக்கம் நகரப் போகிறேன். பழையபடி இணையங்களில் அலையப்போகிறேன். பிரயாணங்களும் கூட என் ஆய்விற்காய் எனக்கு விதிக்கப்படும். ஒருவேளை இது ரகசியமாக இருப்பின்..?

தூக்கம் வர மறுத்துக் கொண்டேயிருந்தது. எதிர்பார்ப்புக்கள் நிறைந்து போயிருக்கும் போதும் வேலைப்பழு மனதில் நிரம்பிய பின் இராக்களில் விழிப்புத்தானே கிடைக்கும் பரிசு. எனது Hostel வாழ்க்கை, என்னை மாற்றிவிட்ட நாட்கள், என் தொழிலின் காரணங்கள் என்பன நீண்ட விழிப்புக்களைத் தந்திருக்கிறது. அவைபோல் இன்றைய இரவும் விழிப்புக்காய் விதிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். நேரம் அதிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தாலும் மஞ்சள் தாளின் புதிர் என்னை எங்கோ மிதக்க வைத்துக்கொண்டிருந்தது. எதிர்பார்ப்புக்களுடன் / உட்கற்பிதங்களுடன் அணுகுதல் நம்மை வேறு திக்கிற்கு அழைத்துவிடும் என்ற நம்பிக்கை கொண்டு இத்தனை நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இன்று எதிர்பாராத விதமாய் முற்கற்பிதங்களுக்குள் அகப்பட நேர்ந்ததினை அவமானமாய் கூட உணர்ந்தேன். என்றாலும் முடியவில்லை. இதிலிருந்து விடுபட மஞ்சள் தாளினை பிரதிகள் எடுத்துக் கொள்வது உசிதம் என்ற எண்ணம் தோன்றியது. இணையத்தினில் பிரதிகளை சேமிக்கும் பழக்கம் உள்ள எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே. Scanning செய்து கணனிக்கு எடுக்கும் போது மற்றொரு நிகழ்வினை சந்தித்து அதிர்ந்தும் அச்சமடைந்தும் போனேன். Scan செய்யப்பட்ட மென் பிரதியில் மஞ்சள் தாளில் உள்ள கிறுக்கு விளையாட்டுக் கோலம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்தது. உடனடியாக கிறுக்கு எழுத்துக்காய் பயன்படுத்தப்பட்ட மையினை அறிவது முதன்மையாகியது. இது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது பல சுவாரஷ்யம் நிறைந்த ஆய்வுகளின் முடிவுகள் என் முன்னே வழமைபோல் விரிந்தன. அந்தப் பக்கங்களிலிருந்து பின்வரும் குறிப்புக்களை copy செய்து கொண்டேன். சதுப்பு நிலங்களை அண்டிய அடர்ந்த புற்தரைகளுக்குள்ளே சிறிய தடித்த ~கண்காணல்| என்ற புல்வகை ஒன்று இருக்கிறது. இந்தப் புல்லின் இலைகள் மிகவும் மென்மையாகவும், வழுவழுப்பு நிறைந்தாகவும் இருக்கும். மெழுகால் போர்த்தப்பட்டது போல. இதன் இதழ்களைப் பிடித்து கசக்குகின்ற போது சிவப்பு நிறம் கொண்ட ஒரு வகைத் திரவியம் வெளிப்படும். இது பெண்கள் உதட்டிற்கு பூசும் Lipstick நிறத்தினை ஒத்ததாக இருக்கும். இதனைத் தொட்டு எழுதுகின்ற ஒரு வினோத முறை மிக நீண்ட வருடங்களின் முன் சதுப்பு நில மக்களிடையே காணப்பட்டிருக்கிறது. இந்த சிவப்பு நிற திரவியத்துடன் ரோஸ் பன்னீரினை கலக்குகின்ற பொழுது Brown நிறத்திற்கு ஒப்பான திரவியமாக அது மாற்றம் அடைவதுடன் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கக் கூடியதாய் அடையாளமிடவும் எழுதவும் இதனை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் உப்பு நீரின் கலவை ஏற்பட்டதால் பெரும்பாலான சதுப்பு நிலங்களிலிருந்து கண்காணல் புல்லினம் அழிந்துவிட்டது. இப்போது இந்த கண்காணல் முற்றாக அழிந்துவிட்ட புல்லினமாக பூகோள உயிர்மை நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போது எனது முதலாவது வினா விடைதேடி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து நின்றது.
இதனை யார் எழுதியுள்ளார்கள் என்பதனையும் தாண்டி எந்த நிலப்பிரதேசம் சார்ந்து இது எழுதப்பட்டது என்பது சற்று கண்டு பிடிக்கப்பட்டதாய் இருந்தது. இதன் காலம் கண்காணல் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த காலம் என்பதுவும் நிறுவனமாகியது. ஆகவே கோணாவத்தை சதுப்புசார் நிலமாக இருந்ததனால் இப்புல் அங்கு கிடைக்கக் கூடியதாக இருந்திருக்கலாம். கி.பி 2004ம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் போது கடல் நீர் தென்கிழக்கிஸ்தானின் கடலோரக்கிராமங்களைத் தாக்கியுள்ளது. அதன் போது கோணாவத்தை அதன் இயற்கை அழகினை முற்றாக இழந்ததாகவும் அதன் சுற்றுச் சூழல் முற்றாக அழிந்துவிட்டதாகவும் பூகோள உயிர்மை நிறுவனத்தின் ''கடந்த நூற்றாண்டு வளம்'' அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. ஆக, கோணாவத்தை சார்ந்து முன்னொரு காலத்தில் யாரோ கண்காணல் திரவியத்தினால் இதனை எழுதியிருக்க முடியும். அப்படியாயின் கடல் கோள் அனர்த்தத்திற்கு முன் வாழ்ந்தவர்களில் இவ்வகையான எழுத்து முறைகளை பயன்படுத்தியவர்களை தேடிப் போக வேண்டிய தேவை இப்போது எனக்கு ஏற்பட்டது. இந்த எழுத்து முறைமையை இணையத்தில் தேடிப் பார்த்தபோது அதற்கான ஒரு உதவிப் பக்கங்களையும் காண முடியவில்லை. அது மட்டுமன்றி இந்த எழுத்து அமைப்பு முறை ஏனைய எழுத்துக் கோலங்களுடன் ஒத்துப் போகவுமில்லை. வார்த்தை விளையாட்டிலும், எண் கணித விளையாட்டிலும் இந்த மொழி தன்னை இணைத்துக் கொண்டாலும் அரபும், தமிழ் எழுத்துக்களும் இந்து அராபி எண்களுடன் இணைந்திருப்பதினை நான் இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறேன்.

மொழி ஆய்வுகளில் ஈடுபட்டு உலகின் ஆதிமொழி பற்றிய ஆய்வினைச் செய்த பேராசிரியர் நல்லதம்பி ஆதம் அவர்களின் நூல்களை படித்திருந்ததன் காரணமாக அவர் இந்த இடத்தில் என்னுள்ளே வந்து நின்றார். அரசின் ஒலிபெருக்கித் தடை கடந்த ஒரு நூற்றாண்டாய் நீடித்தாலும்
தென்கிழக்கிஸ்தானில் அது கொஞ்சமும் நடைமுறையில் இருக்கவில்லை. பேராசிரியர் நல்லதம்பி ஆதம் இன்று ஓய்வுடன் அமைதியாகத் தன் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் எவரையும் சந்திக்கும் தருணங்களை அவரின் குடும்பத்தினர் இப்போது அவருக்கு கொடுப்பதில்லை. வைத்தியரும் அப்படித்தான் கூறியிருக்கிறார். சாதாரண மனிதனின் ஆயுள் கோட்டினையும் தாண்டி இன்னும் இருக்கிறார் பேராசிரியர். இந்த மஞ்சள் கிறுக்கல் மொழியினை அப்படியே பார்த்து இன்னொரு பிரதியினை எழுதியெடுத்துக் கொண்டேன். நான் கூட எதிர்பார்க்காத கோணமொன்றில் பேராசிரியரை சந்திக்க கிடைத்தது. மொழிக் கிறுக்கினைப் பார்த்து எந்தவித சலனமுமின்றி பேராசிரியர் இருந்த போது நான் அது தொடர்பான நிலைப்பாடுகளைக் கூறினேன். அதையும் அவ்வாறே கேட்டவரிடம் ஆர்வம் அதிகரித்திருக்க வேண்டும். வெள்ளி போன்று மினுங்கிக் கொண்டிருந்த அவரின் கைத்தடியின் துணையுடன் எழுந்து சென்று முன்னே இருந்த ஜன்னலின் திரைச் சீலைகளை விலக்கிவிட, காலை வெயில் இதமாகவும் ஒவ்வொன்றாக வும் அந்த நீண்ட வராந்தைக்குள் வந்து கொண்டது. இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியமைப்பைப் போல் தென்படவில்லை. ரகசியமான விடயங்களைப் பரிமாறிக் கொள்ளும் உளவாளிகள் தங்களின் குறியீடுகளாய் இதனைப் பயன்படுத்தியிருக்க முடியும். இந்த மொழிக்குறிகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரான எழுத்து மாதிரிகளைக் கொண்டது. எந்தக் காலத்திலும் அழியாது இருக்க வேண்டுமென்பதற்காய் இயற்கைத் திரவியம் ஒன்றினை பயன்படுத்தி உள்ளார்கள்.

சிலவேளைகளில் இது கண்காணல் புல்லினமாகக் கூட இருக்க முடியும் என்றார் பேராசிரியர். எனக்கு எதுவுமே புலப்படவில்லை. தென்கிழக்கிஸ்தானின் வரலாற்றில் அரசியல் மிக முக்கியமானது.
ஆனால் ரகசியமாக அங்கு என்ன நடந்திருக்க முடியும்? இது ஒரு கேலி விளையாட்டோ..?

இந்த மொழிமாதிரியை தன் நினைவில் நிறுத்திக் கொண்டு Diaryகளை வேகமாகப் புரட்டிக் கொண்டிருந்த பேராசிரியரைப் பார்த்தபோது எனக்குள் ஆர்வம் வேகமாகியது. திடீரென பேராசிரியர் பக்கங்களைப் புரட்டுவதை நிறுத்திவிட்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த மொழி அமைப்பைக் கொண்ட மற்றொரு பிரதி தென்கிழக்கிஸ்தானின் நூதன சாலையில் 63வது வாயிற் கதவிற்கு அருகிலுள்ள முதுரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடி சுவர்களுக்கு பின்பகுதியில் இருக்கிறது. இதனை துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் எழுதியிருக்கிறார். என்று மூச்சு வாங்கும் அளவு வேகத்தில் கூறி முடித்தார் பேராசிரியர். தன்னை மீளவும் தேடல் நிறைந்த உலகத்தினுள் சஞ்சரிக்க ஆயத்தப்படுத்துவது போல் மாறிக்கொண்டிருந்தார். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார்.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த வீடு தென்கிழக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையமாக இன்று இருக்கிறது. பேராசிரியரின் தேடலில் ஏதோ தென்பட்டிருக்க வேண்டும். சிலசில குறிப்புகளுக்கிடையே தேடல்கள் தங்கிச் செல்வது இயல்புதானே. துக்தூர் இந்தக் குறியீடுகளின் ஊடாக எதையோ சொல்ல வருகிறார். அவரின் புத்தகங்களும் ஆய்வு முடிவுகளும் இணையப் பக்கங்களும் தாண்டி அவர் ஏன் இந்த கண்காணல் திரவியம் மூலம் இப்படி தனக்கான மொழியை பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் மீள மௌனித்துப் போனது இன்னும் எனக்குள்ளே கேள்விகளின் வாதப் பிரதிவாதங்களை கிளறி விட்டுக் கொண்டேயிருந்தது. திடீரென எழுந்து தன் மென்பொருள் கோவைகளுக்கிடையே இருந்த ஒரு கோவையைத் திறந்து ஆழமாக உற்றுநோக்கிய பேராசிரியர் ''இன்னும் சில ஆய்வுகளினை மறைத்துவிட வேண்டிய நிலையில் நான் இப்போது உள்ளேன்'' என்று இறுகிய குரலுடன் கூறியபோது அது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ''வழிப்போக்கனின் பாதையோரங்கள்'' என்ற நூலின் மென் பிரதியின் 112வது பக்கத்தினில் இருப்பதென தெரியவந்தது.

''வழிப்போக்கனின் பாதையோரங்கள்'' துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ஆய்வுகளினையும் அவரின் பல்துறைசார்ந்த வாழ்வு பற்றியுமான கதைத்தொகுதியாகும். இலத்திரனியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி என்று பல்வேறு துறைகளினூடாக தன் வாழ்நாட்களின் ஒவ்வொரு வினாடிகளையும் நகர்த்தியவர் துக்தூர். அன்று பிரிவினைவாதிகள் சுதந்திர நாடு கோரி அரசியல் தோல்வி அடையும் தறுவாயின் முன்னரே அரங்கேற்றிய வெறியாட்டத்தினுள் துக்தூரும் அகப்பட்டுக்கொண்டார். இரசாயன ஆய்வுகளில் மிக முனைப்புடன் ஈடுபட்டிருந்தவரை
பிரிவினைவாதப் போராளிகள் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்குமாறு வேண்டினர். ஆனால் மனிதர்களை அழிக்கும் போராட்டத்திற்கும் திட்டமிடாத வன்முறையிலான சமுதாய மாற்றத்திற்கும் தான் உதவ முடியாததென கூறியிருக்கிறார் துக்தூர். அது மட்டுமன்றி தென் கிழக்கிஸ்தான் உட்பட கிழக்கிஸ்தான் வடநாடு பெருநிலப்பரப்பில் வாழ்ந்த சோனக முஸ்லிம்களை இந்தப் பிரிவினை வாதப் போராளிகள் மிக மோசமான அறவே மனிதாபிமானமற்ற முறையில் வழிநடத்தியமையும் அவர்களுக்கு இழைத்த சொல்லொண்ணா கொடூரங்களாலும் துக்தூர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தக் காலங்களில் அவர் அரசியல் பற்றியும் விஞ்ஞான ஆய்வுகளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழிப்போக்கனின் பாதையோரங்களினை துக்தூர் பெருமளவில் எழுதி முடித்திருந்தாலும் அவர் போராளிக் குழுவில் இருந்தவர் என ஆட்காட்டி பொம்மை அரச படைகளிடம் தவறாய் வேண்டுமென்று காட்டிக் கொடுத்ததினால் இவர்அரச படைகளினால் டயர் போடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் ஆய்வு மாணவன் காதர் மொஹ்தீனாலே அந்தக் கதைத் தொகுதி முழுமை செய்யப்பட்டது. அதுவும் துக்தூர் காதர் மொஹ்தீனுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் கதைத்தொகுதியின் பின்னைய பக்கங்களாக சேர்க்கப்பட்டன. ஆனால் கதைத்தொகுதி வெளிவந்து இரண்டு மாதங்களின் பின் இன்றைய எண்ணெய் வள நாடான பங்கோளினிலில் நடைபெற்ற வீதி விபத் தொன்றில் காதர் மொஹ்தீன் மௌத்தாகிவிட்டார். இதனால் துக்தூர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளிவராமலே போய்விட்டன.

நான் பேராசியரியரின் அனுமதியுடன் தென்கிழக்கு நூதனசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இந்த நூதனசாலை நபிகளாரின் நினைவு நாளுக்கான பரிசாய் உருவாக்கம் பெற்று தென் கிழக்கிஸ்தான் பல்கலைக் கழகத்தின் பரிபாலனத்தின் கீழ் வந்ததொன்றாகும். ஆனால் அந்தக் காலத்தினில் போதியளவு இது பயன்படுத்தப்படவில்லையென்று கூறப்பட்டது. பின் சில ஆய்வு மாணவர்களின் முயற்சியால் இங்கிருந்த நுண்பொருட்கள் முதன்முதலாக பல்வேறு வகையான ஆய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டது. அதன் போதுதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் பரம்பரையும் அவர்கள் முதல்மனிதன் ஆதமின் நேரடிவழித்தோன்றல்கள் என்பதும் உலகின் மூத்த மொழியாக ஆதம் பேசிய ஆனால் எழுத்துரு பெறாத தொக்கு வசனங்களுடனான எழு மொழியும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் ஆதமின் வழித்தோன்றல்களாக் கொள்ளப்படும் இலங்கைச் சோனகர்கள் அரபுத்தேசங்களில் இஸ்லாத்தின் வருகையின் பின்னர் தாங்கள் எதிர்பார்த்திருந்த இறுதித்தூதரின் வழியை ஏற்றுக்கொண்டதையும் அந்த தூசுக்குள் கிடந்த நூதனசாலையின் பொருட்களே நிறுவிக்காட்டின. அப்படிப்போந்த நூதனசாலைக்குள் இன்று நானும் ஓர் ஆய்வு மாணவனாய்ப் போகிறேன்.

63வது வாயிற்கதவின் அருகிலுள்ள முதிரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடிச் சுவர்களிற்குப் பின்பகுதி இப்போது எனக்காய்க் காத்திருப்ப தாய்ப்பட்டது. உண்மையிலே இந்த ஒரு நூற்றாண்டாய் அது எனக்காகத்தான் காத்திருக்க வேண்டுமென்று மனதிற்குள் பெருமையாய் கூறிக்கொண்டேன். என்றாலும் அந்த பிரதியை பார்க்கும் வரை இப்போது வந்திருக்கும் நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் குறிப்புக்களையும் நகல் எடுத்துக்கொண்டேன். இறைவனின் விளையாட்டுக்களில் இன்று நான் ஆய்வாளன். ஒரு வரலாற்றின் தொடக்கம் அல்லது ஒரு சமுகத்தின் தலைவனுடைய ஆய்வு ரகசியம் என்னுள்ளே இருக்கிறது. இதுவரை இவ்வுலகின் தலைவிதிகளை ஆய்வுகளும் சிந்தனைத் தளங்களும்தானே ஆண்டிருக்கின்றன. மேடைகளில் முழங்கும் தலைமைகள் வெறும் பொம்மைகள் என்பதினை சாதாரண மக்களும் நன்கறிவர். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் மக்கள் அறிந்த ஒரு விஞ்ஞான மனிதர். சமூகவியலை விஞ்ஞானத்துக்குள்ளும் விஞ்ஞானத்தை அல்குர்ஆனிற் குள்ளும் தேடியவர். ஒரு பணக்காரனாக வாழ்ந்து கொண்டே ஏழைகளின் பாயில் தூங்கி எழுந்தவர். இப்போது என்னிடம் ரகசியமாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

கண்ணாடிச் சுவர்களின் கீழே சூரிய ஒளியின் கதிர்கள்படும் போது மட்டும் ''காலைக்கதிர் எழும்பும் திசையின் மேற்புரத்தே ஒளி அடையும் வரை அது நேர்தான். பிரமிட்டுகளின் நிர்மாணத்திற்கு இதுதான் வழியாகும். ''என குறிக்கப் பட்டிருந்தது. அதிர்ந்து போனேன். என்னிடமிருந்த காகிதத்துண்டும் இதுவும் ஒன்றாகிவிட்டதா? அதே மொழி. ரகசிய மொழி. துக்தூர் பிரமிட்டுக்களின் நிர்மாணத்தில் கையாளப்பட்ட ஒளியின் நேர் வடிவினை ஆய்வு செய்திருக்கிறார். அது தான் சூரியனின் ஒளி இந்தக் கண்ணாடிச் சுவர்களிற்குள் வராவிட்டாலும் சிறிய ஒளி வரும் போதே இந்த எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. வெளிச்சம் மறையும் போது எழுத்துக்களும் மங்கலாகின்றன. அப்படியாயின் எதனை அவர் இங்கு மறைத்துப்போட்ட மொழிக்குறிகளால் கூறியுள்ளார். இது தொடர்பாக நூதனசாலை அதிகாரியிடம் விசாரிப்பதாய் முடிவெடுத்துக் கொண்டேன்.

துக்தூரின் ஆய்வுகளில் பல புரிந்து கொள்ளப்படாமலே இன்னும் இருக்கின்றன. அவரின் ரகசிய மொழியும் கூட. ஆனால் பெரும்பாலான விடயங்களின் மீது துக்தூர் செயற்பட்டிருக்கிறார். இவரின் மொழியினூடாக சில முக்கிய விடயங்களை தெரிந்து கொள்ளாதளவிற்கு அவர் விட்டுச்சென்று விட்டார். ஆனால் வட நாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரான சங்கரப்பிள்ளை பெரியதம்பி தன் இளமை நாட்களில் இவரின் மொழிபற்றி சில ஆய்வுகளை இங்கு
வந்து நின்று செய்தார். ஆனால் அதனை முற்றுப்பெற வைக்கவில்லை. அவரின் மொழி ஆய்வுகள் சில என்னிடம் நகல் பிரதியாக இருக்கின்றன. அது உங்களுக்குப் பயன்படலாம் என நினைக்கிறேன் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளரும் நூதனாசாலை அதிகாரியுமான உடகெதர முஹம்மத் ஸாலி தன் கோப்புகளிற்கிடையே இருந்த ஒரு தொகுதி நகல் பிரதிகளைகளைத் தேடித்தந்தார். அது சங்கரப்பிள்ளை பெரிய தம்பியின் கையெழுத்துடனான ஆய்வுக்குறிப்புகளாய் இருந்தன.

ச.பெரிய தம்பி ஏன் இந்த ஆய்வுகளை முழுமை பெறச்செய்யவில்லை என்ற கேள்வியினையும் தாண்டி அவரின் ஆய்வுக்குறிப்புக்கள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் னயசைலகளையும் ச.பெரியதம்பி தன் ஆய்வில் இணைத்திருக்கிறார். அதன் மூலம் தான் என்னிடமிருந்த புதிர்கள் மீதான விடையின் பாதை
திறக்கப்படும் என்ற நினைப்புடன் நான் நூதனசாலை சென்றிருக்கவில்லை. ஆய்வுக் குறிப்புக்களை இரண்டு நகல் பிரதிகள் எடுத்துக்கொண்டு நிறைந்த ஒரு ஆய்வாளனுக்கான மனத்திமிருடன் வெளியேறினேன். உங்களை மீளவும் சந்திக்கும் போது துக்தூர் பற்றிய பல நிஜங்களும் இன்னும் சில பக்கங்களையும் உலகம் தன் வரலாற்றில் இணைக்கும் என உடகெதர முஹம்மத் ஸாலியிடம் கூறிய வேளை அவர் என் கரம்பற்றி தோள்களை அழுத்திய போது நான் பொறுப்புச் சாட்டப்பட்டவன் என்ற எண்ணம் என்முன் எழுந்து நின்றது.

ச.பெரியதம்பியின் எழுத்துக்களைப் படிப்பதற்குள்ளே நாட்கள் நகர்ந்து விடுமே என்ற அச்சத்துடன் தான் நகல் பிரதியில் இருந்த எழுத்துக்களைப் பார்த்தேன். தன் பல்கலைக்கழக விடுமுறைகளின்
போது பெரியதம்பி ஜயா துக்தூர் தொடர்பான ஆய்வுகளைச் இங்கு செய்துள்ளார். என்னிடமிருந்த குறிப்புக்கள் ஒரு உலகம் தாண்டி என்னை அழைக்க முயன்று கொண்டிருந்தது. துக்தூர் ஒரு வழியினூடாக பயணம் செய்தவர் போலத் தெரியவில்லை. எல்லாத் துறைகளையும் ஆராய்ந்து கொண்டே இருந்திருக்கிறார். அரசியலும் அவ்வாறுதான் அவரிடம் இருந்திருக்கிறது. முடிந்த முடிவாய் எதையும் நிர்ணயிக்காத தொடர் பயணம் இவருடையது. ஆரம்ப காலங்களில் போராளிகளுக்கு கூட தன் சொந்த செலவில் சமூக விதிமுறைகளைப் பற்றியும் சமூக உளவியல் பற்றியும் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். உயர் மட்ட போராளிகள் போராட்ட விதி முறைகளையும் இவரிடம் தங்கியிருந்து கற்றிருக்கின்றனர். சில காலம் போராளி களுக்கு மறைவான தங்குமிடமாகக் கூட துக்தூரின் வாசஸ்தலம் இருந்திருக்கிறது என தன் முதல் பக்க ஆய்வுக்குறிப்புடன் ச.பெரியதம்பி துக்தூரை ஆராயத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்புக்களை தொடர்ந்து புரட்டிக் கொண்டு போனபோது ''மொழி'' என்ற தலைப்பு என்னிடம் இடறி விழுந்து நின்றது.

அறபு மற்றும் தமிழ் எழுத்துக்களுடன் நமது இலக்க அமைப்புக்களையும் இணைத்து சில முக்கிய விடயங்களினை குறித்து வைக்கின்ற ஒரு நீண்ட பழக்கம் இவரிடம் இருந்ததாய் இதுவரை என்னால் அறிய முடிகிறது. புராதன மன்னர்கள் உள்ளிட்ட உலக வரலாறுகளில் இதனை நிறையவே காணக்கிடைத் திருக்கிறது. ஆனால் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி மரபான சமுக
அமைப்புக்கள் மாற்றமடையத் தொடங்கியதும் அனைத்திற்கும் இலத்திரனியல் அத்தியவசியமான பொருளாக மாறியது இந்த குறியீட்டு ரகசிய முறை வழக்கொழிய பெரும் காரணமாகியது. என்றாலும் தொழில் நுட்ப மாயைக்குள் மூன்றாம் மண்டல நாடுகளை திக்குமுக்காடச் செய்துவிட்டு தன் இலத்திரனியல் மேலாதிக்கத்தின் மூலம் இந்நாடுகளின் மனித மூளைகளை மூடியே வைத்திருக்கின்ற மேற்கைய ஃ தகவல் தொழில் நுட்ப நாடுகள் தம் ரகசியங்களுக்கு இன்னும் இந்த முறைகளினை கையாள்வதை நாம் அறிகிறோம். என்றாலும் மருத்துவ மற்றும் இதர துறைகளில் அதி நவீன பாய்ச்சலைக் கொண்டிருக்கும் இவர் இந்த குறியீட்டு மொழிகளினால் தன் ஆய்வினையும் கண்டுபிடிப்புக்களையும் வணிகத்திடம் பறிகொடுத்து விடாது பாதுகாத்திருப்பது அதியுயர் செயற்பாடன்றி வேறென்ன? இந்த மொழியை இவர் தன் சுய ஆளுமையினால்தான் வளர்த்திருக்கிறார். பொரும்பாலான ஆய்வுக் குறிப்புக்களும் இரசாயனவியல் சேர்க்கைகள் பற்றிய குறிப்புக்களும் இந்த மொழியினூடாகவே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் சமூகவியல் செயற்பாடுகளுக்கான தன் ஆய்வுகளை அவர் இக்குறிகள் ஊடாக எழுதியிருந்தா லும் அதனை மிகப் பகிரங்கமாக தன் பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரயோகித்து பலரினை சமூக விஞ்ஞானிகள் என்ற பட்டதிற்கு தயார்படுத்தியுள்ள மையை வெளிப்படை யாக அறிய முடிகிறது. இவரின் மொழியமைப்பில் நான் பிரமித்தது போல இவரின் ஆய்விலும் பிரமித்துள்ளேன். தொழில் நுட்ப வளர்ச்சி நாடுகளிற்கு இந்தத் தீவில் இருந்து கொண்டே தன் அறிவால் சவாலாக இருந்தவர் துக்தூர் என்பதனை ஏற்கத்தான் வேண்டும். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக்குள் தன்னை ஈடுபடுத்தியவர் இவ்வாறு மொழியிலும் சிறப்புற்று இருப்பது அதிசயமாகவே இருக்கிறது. துக்தூரின் மொழிக் குறியீடுகளில் சில விடயங்களை அவதானித்து அதனைப் பொருத்தியும் பார்த்தேன். தமிழ் எழுத்துக்களும் அறபு எழுத்துக்களும் நெடில் மற்றும் இதர குறிகளையும் துக்தூர் பயன்படுத்தியுள்ளார். 1 தொடக்கம் 9 வரையான ஒன்பது இலக்கங்களின் பின்னே அ தொடக்கம் ஒள வரையான எழுத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அதே போல் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இருக்கின்ற ஏனைய விசிறிகளும் இதில் இணைக்கப்பட்டிருப் பதினைக் காண்கிறேன் என ச.பெரிய தம்பியின் ஆய்வுக் குறிப்புக்கள் கூறிக்கொண்டே தொடர்ந்திற்று.

நான் பாதை தெரிகின்ற வழியில் வந்து நின்றேன். இதனை உடனடியாக பேராசிரியர் நல்லதம்பி ஆதமிடம் தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டிய துணை ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினேன். இதனை விட வேறென்ன தேவை இருக்கிறது என என் மனம் கேட்டுக் கொண்டே வந்தது.
அவதானிப்புக்களையும் ஒழுங்குகளையும் அல்லாஹ் மனிதனின் இயல்புடன் வைத்திருப்பதினை நாம் எத்தனை பேர் நியாயமாக புரிந்து வைத்துள்ளோம்? துக்தூர் சிங்கள மொழியில் இருந்தும் குறிகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிங்கள எழுத்துக்கள் எதனையும் அவர் குறிகளாக எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டிருந்தால் துக்தூரையும் சிங்கள national colorதாத்தாமார் புனிதனாக ஏற்று புனித நிலப்பிரகடனம் கூட செய்யப்பட்டிருக்கும் என மனம் சிரிப்புடன் கூறிக் கொண்டது. இப்போது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் குறிகளில் பெரியதம்பி சேகரித்தவற்றி லிருந்து சிலதினை ஒழுங்கமைத்துப் பார்த்துக் கொண்டேன். பொருத்திப் பார்த்த போது இரசாயனக் கலவையின் சூத்திரங்களை அது கூறியது. இரசாயனவியல் அறிவிற்கும் எனக்கும் மிகத்தூரம் என்பதால் அக்குறிகளின் மொழி மாற்றத்தை அப்படியே ஏற்றேனோ தெரியாது.

இப்போது நான் எனது மஞ்சள் தாளின் கிறுக்கு விளையாட்டுக்கு மீளவும் திரும்பி அதன் பிரதியைப் பார்தேன். அதில் காணப்பட்ட வரிகள் ஆயிரம் பொருள் கொண்டதாய் தெரிகின்றன. மனிதனும் கூட அப்படி த்தான் இருக்கிறான். புறவயத்தினை வைத்து இது இவை இவைதான் என்ற எந்த முடிவுகளையும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நமது கற்றலில் அனுபவம் மிகப் பெரிய இடத்தினை கொண்டுள்ளது. நாம் நினைக்கும் தன்மைகளை விட அகவயம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. சிரித்த அழகிய புறவயத்தின் பின் மிக மோசமான காரிருள் அரசாட்சி
செய்வதினை அனுபவித்து அனுபவித்து முடிந்ததன் பின்னும் மனிதன் நல்லவன் என்றே இன்னமும் நினைக்கிறேன். உலகின் இருள்களில்தான் மனிதன் தன் சுயத்துடன் இருக்கிறான் போல. தனக்கு எது சாதகமோ அதனை மட்டுமே முன்னெடுக்கிறான். மற்றவர்களின் அகத்தினை நிமிர்ந்து பார்ப்பது மனிதனின் பண்பல்ல எனுமளவு மிக மோசமாகிவிட்டது. போராட்டமும் அப்படித்தான் இத்தீவில் சென்று விட்டதாம். நசுக்கப்படுகிறோம் எழுந்திருப்போம் என்ற பன்மை விகுதிகளின் சில நிகழ்ச்சித்திட்டங்கள் மாறி ஒருமை விகுதிகளாக உருமாற்றம் பெற்ற கேவலம் இங்குதான் நடந்தேறி முடிந்திருக்கிறது. எனது மஞ்சள் தாளின் வரிகளுக்குள் புதைந்து போன ஒரு உலகத்தின் புதிர்களுக்கான சாவிகளுடன் இன்று நான் மிதந்து கொண்டிருக்கிறேன். தொழில் நுட்பமும் தகவல் அறிவும் போதியளவு விருத்தியடைந்திடாத சூழலில் இவரால் எப்படி இந்தளவு துணிவுடன் பணியாற்ற முடிந்தது. அதுவும் மனித உடலில் chipகளை நிறுவிய இவரின் ஆளுமை இன்னும் என்னை அதிரவைக்கிறது.

பேராசிரியர் நல்லதம்பி ஆதம் என் ஆய்வில் என்னை விட மிக அவதானமாக இருந்திருக்கிறார். மஞ்சள்தாளின் கிறுக்குகளினை பொருத்திப் பார்த்து சில விடயங்களை அவதானித்த கையோடு பேராசிரியரின் இல்லத்தையே என் ஆய்வுத் தளமாக மாற்றிக் கொண்டேன். இதற்கு மிகப் பெரிய காரணமொன்றும் இருந்தது. என்னிட மிருக்கும் இணையத் தொடர்பின் வேகம் 128GB தான் ஆனால் பேராசிரியரிடம் இருப்பது 1024GB வேகத்தினை கொண்டிருந்தமையாகும். துக்தூரின் மிக முக்கிய பக்கங்களுக்கு நானும் பேராசிரியரும் வாயிற்கதவு போல் இருப்பதாய்ப்பட்டது. தலை
வெடித்துவிடும் கனதியுடன் துக்தூரின் மஞ்சள் தாள் ரகசியம் எங்கள் முன்னே ஒரு மிகப் பெரிய உலகினை விரித்துப் போட்டிருந்தது. விழிப்புக்களே நாட்களின் பெரும்பகுதிக்குச் சொந்தமாய் இருந்தாலும் தேடலும் மறைவானதை முதலில் கண்டு பிடிப்பதில் இருந்த ஆர்வமும் எங்கள் கூடவே இருந்திற்று. இல்லாததொன்றை தேடுவதும், கட்புலனாக உணர்வுகளின் வீச்செல்லையால் தாக்கப்படும் போதெல் லாம் நாம் அபரிமிதமாக வேகமடைகிறோம் என்று அடிக்கடி பேராசிரியர் தத்துவம் கதைத்துக் கொண்டேயிருந்தார்.

மிகுந்த ஆச்சரியத்துடன் கணனித் திரைக்கு முன் இருவரும் இருந்தோம். ஒருவரையொருவர் இப்படிப் பார்ப்போம் என்ற எந்த முகாந்திரமும் இந்த ஆய்வின் ஆரம்பத்தில் எங்களுக்கு
வந்ததில்லை. அதேபோல் இரவு பகல் என்று பாராமல் கணனிக்கும் எங்களுக்குமிடையே உறவுகள் பிணைக்கப்பட்டிருந்தாலும் இப்போது அதன் திரை முன் அதிசயத்துடனே நாங்கள் இருப்பதாய் உணர்ந்தேன். வெள்ளியிரவுகளில் சந்தனக் குச்சிகளை உம்மா கொழுத்தி வீட்டின் நாலாபுறமும் வைக்கும் போது பரவிக்கொண்டிருக்கும் நறுமணத்தினையும் விட அந்தப் புகைக்கூட்டம் எனக்கு பல சேதிகளைச் சொல்லியிருக்கிறது. புகைகளில் இருந்து மனிதர்கள் எழுந்து வருவதாக பல திரைப்படங்களையும் நான் அதன்போது எடுத்திருக்கிறேன். இந்த எண்ணங்களும் கணனிக்கு முன்னால் நாங்கள் அச்சம் கலந்த பிரம்மிப் புடன் இருப்பதாகவேபட்டது. மஞ்சள் தாள் விடயத்தில் எங்களுடன் தொடர்ந்து இருந்து பல உதவிகளைச் செய்த றஸா முஹம்மதின் தொந்தரவு கலந்த கதைகளும், நம்பிக்கைகளும் அடிக்கடி அவனை திரும்பிப் பார்க்கவே செய்யும். மனதினை ஒரு விடையின் பக்கம் நகர்த்திக் கொண்டு துக்தூரின் மஞ்சள் தாளில் மறைத்துக் கூறப்பட்டிருந்த இணையத்தளமொன்றின் முகவரியான www.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med என்பதனை டைப் செய்தேன்.

சாரு நிவேதிதா சிறுகதைகள் 03

பின்வரும் காரணத்திற்கு அமைய சாரு நிவேதிதாவின் சிறுகதைகளை இந்த தளத்திலிருந்து நீக்கம் செய்து விடுகிறோம்.

சாருவின் குழுவிற்கும் எமக்குமிடையே நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடலினை நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இத்துடன் இணைத்துள்ளேன்.

பர்ஸான்.ஏஆர்.


On Wed, Sep 3, 2008 at 6:43 PM, srinivasan arcusinfotech <sri7thsense@yahoo.com> wrote:

hi zanfar ,
greetings to you.
am one of the co ordinator for charu's web site.
we find charu's short stories on your blog.we did not receive any request or information from any end.
due to some reasons mr.charu does not like his writings available on other web sites.
your intrest and this initiation is appreciable but we are not in a position to co operate with you.so please delete his writings from your blog.
i am very sorry ,if any of the above words hurts you .
have a nice day .wish you all the best for everything.
regards
sri

From: "Zanfar Street Child"
To: sri@arcusinfotech.com
Subject: Re: charu 's story in your blog - reg
Date: Thu, 4 Sep 2008 09:25:37 +0530
Hi dear,

I send this site information to charus online email. but not any replay from your/charu site. this is a first time we try in sri lanka. if you can consider with charu again to this site. if not possible we delete charus stores from this site.

thanks

regards,
farzan.ar

hi,

thanks for your reply.charu have different plans in future ,so he don't want to publish his stories in other web sites .i hope you understand and kindly remove his stories.

regards

sri

From: "Zanfar Street Child"
To: sri@arcusinfotech.com
Subject: Re: charu 's story in your blog - reg

Hi,

I accept your mail. now i remove charu's stores from நீண்ட தெரு . visit.

regards,
farzan.ar

எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள் 02

மூன்று குடும்பக் கதைகள்
1பீங்கான் நாரைகள்

தனது பதினேழாவது வயதில் அம்மா ஒரு நாள் சமையல் செய்து கொண்டிருந்த போது அப்பா பர்மாவிலிருந்து கொண்டுவந்திருந்த தேநீர் கோப்பையை கைதவறி உடையவிட்டதில் இருந்துதான் இப்படி தரையை வெறித்து பார்த்தபடியிருக்கிறாள் என்கிறார்கள். அப்போது நாங்கள் பிறக்கவேயில்லை. அந்த தேநீர் கோப்பை சீனா களிமண்ணில் தயாரிக்கபட்டது அதில் இரண்டு நாரைகளின் உருவம் தங்கநிற சித்திரமாக தீட்டப்பட்டிருந்தாக அப்பா சில முறை சொல்லியிருக்கிறார். அநேகமாக திருமணமான புதிதில் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அப்பா அந்த தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு வந்திருக்க கூடும். சம்பவம் நடந்த அன்று அம்மா சூடான தேநீரை கோப்பை நிறைய ஊற்றியதால் கையில் எடுக்க முடியாமல் தவறி கிழே போட்டிருக்கிறாள். அப்பா உடைந்து கிடந்த தேநீர் கோப்பையை கண்டதும் அவள் கன்னத்தோடு ஒங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு உருப்படாத கழுதை.. பர்மா கப்புடி.. ஒரு நிமிசத்திலே உடைச்சிட்டே..அடக்க ஒடுக்கமா இல்லாம திம்மானி மாதிரி நடந்தா இப்படி தான் ஆகும் என்று வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கிறார். அம்மாவிடம் சலனமேயில்லை. திருமணத்திற்கு முன்பு வரை அப்பா பர்மாவில் மரவணிகம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் பர்மாவிற்கு போகவில்லை. நன்மைதருவார் கோவில் சந்தில் சிறியதாக ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து கொண்டு இங்கேயே வாழத் துவங்கிவிட்டார். அம்மாவை அவர் எடுத்திருந்த ஒன்றிரண்டு புகைப்படங்களில் கூட அவள் தரையை வெறித்தபடிதானிருக்கிறாள். அப்பாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக ஒரு போதும் தோன்றவேயில்லை. அப்பா மட்டுமில்லை. வீட்டில் இருந்த சித்தப்பாக்களோ ஆச்சியோ யாருமே அதை ஒரு பொருட்டாக நினைக்கவேயில்லை. எப்போதாவது வேற்று ஆட்கள் யாராவது வீட்டிற்கு வரும்போது தான் அம்மா தலையை குனிந்து கொண்டேயிருக்கிறாள் என்ற விஷயம் கவனத்திற்கு வரும். அப்பா அது ஒரு வியாதி என்று சொல்லி சமாளித்துவிடுவார். அம்மா தரையை வெறித்தபடி என்ன தான் பார்த்து கொண்டிருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவளது பார்வை பூமியில் ஏதோ முக்கியமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருப்பது போல அத்தனை கூர்மையாகயிருக்கும். இரவிலும் கூட அம்மா சமையற்கட்டின் உள்ளே வெறும்தரையில் முகத்தை பூமியை நோக்கி பார்த்தபடி தான் படுத்திருப்பாள். அம்மாவின் குடும்ப வாழ்க்கையில் இதனால் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. ஆறு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அதில் ஒன்று பிறந்த சில வாரங்களிலே இறந்தும் போயிருக்கிறது. அவள் குழந்தைகளை கூட தலையை நிமிர்ந்து பார்த்ததேயில்லை. அம்மா குனிந்தேயிருந்து இருந்து அவளது கழுத்தே அறுபட்ட வாழைமட்டை தொங்குவது போல கீழ் நோக்கி தொங்கி கொண்டிருக்க துவங்கியது. அம்மா சமையல் அறைக்குள்ளாகவே தனது வாழ்க்கையை கழித்தாள். எப்போதாவது கைதவறி ஒரு டம்ளரோ கரண்டியோ விழுந்தவுடன் அவள் மிகுந்த ஆவேசத்துடன் பூமியை திட்டிக் கொண்டிருப்பதை காணும் போது தெரிந்த யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருப்பது போலவேயிருக்கும். வீட்டில் பகலும் இரவும் அப்பாவின் குரல் எதையாவது சாப்பிடவோ குடிக்கவோ யாசித்து கொண்டேயிருந்தது. அபூர்வமாக வீட்டில் யாரும் இல்லாத நாட்களில் கூட அம்மா வெளியே போனதேயில்லை. அவளுக்கு உலகம் நேர்கொண்டு பார்க்க விருப்பமற்றதாக பதிந்துவிட்டது. சில நேரம் அம்மாவை போல நானும் தலையை குனிந்தபடியே நின்று பார்ப்பேன். ஏதோ ஒரு குற்றமனப்பாங்கு மனதில் கசிய துவங்கி மெல்ல அழுத்த துவங்கிவிடும். ஒரு சாதாரண பீங்கான் கோப்பையை உடைத்தற்காக எதற்காக இப்படியொரு தண்டனையை கொடுத்து கொண்டிருக்கிறாள் என்று யோசித்து கொண்டேயிருப்பேன். என்னால் அவளது இயல்பை புரிந்து கொள்ளவே முடியாது. காலம் வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்ற துவங்கியது. திருமணமும் வேலையும் வீட்டினுள் வளைய வந்த எங்கள் அக்காகளையும் என்னையும் வேறுவேறு ஊர்களுக்கு இடம் மாற்றியது. சாவு ஒரு விருந்தாளியை போல வீட்டில் நுழைந்து அதன் விருப்பமான மனிதர்களை கவ்விக் கொண்டு சென்றது. ஆச்சி இறந்த போதோ, சித்தப்பாவின் மரணத்திலோ அம்மாவிடம் சிறிய மாற்றம் கூட ஏற்படவேயில்லை. அப்போதும் அம்மா தலை குனிந்து கொண்டேதானிருந்தாள். வயோதிகம் முற்றி அம்மாவும் அப்பாவும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். அப்போதும் கூட அம்மாவின் சமையல் வேலை ஒயவேயில்லை. அவள் கரப்பான் பூச்சிகளோடும், ஈரத்தில் நமத்து போன தீக்குச்சிகளோடும் பேசிக்கொண்டிருப்பதை அப்பா கேட்டிருக்கிறார். அவருக்கு சில சமயம் அம்மாவை பார்க்க பயமாகயிருக்கும். தனக்கும் வயதாகிவிட்டது என்று அவளுக்கு தெரிந்திருக்குமா, எதற்காக இத்தனை வைராக்கியமாக இருக்கிறாள் என்று அவளை பார்த்தபடியே யோசித்து கொண்டிருப்பார். அவள் முறிந்த தானியக்கதிர் போல தலைகவிழ்ந்து கொண்டிருப்பாள். அம்மா யாரையும் குற்றம் சொன்னதோ திட்டியதோயில்லை. கோடைகாலத்தின் பின்பாதியில் ஒரு நாளிரவு எங்கள் அப்பா குளியல் அறைக்குள் விளக்கு போடாமல் நடந்து போய் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அன்றைக்கு கூட அம்மா வீட்டில் சமைப்பதை நிறுத்தவேயில்லை. அப்பா இறந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது கூட அவள் அதே சமையல்கட்டின் உள்ளே தரையை பார்த்து குனிந்தபடியே அழுது கொண்டிருந்தாள். அவரது உடலை எடுத்து கொண்டு வெளியே போகும் நிமிசத்தில் அவள் விடுவிடுவென முன்வாசலுக்கு வந்து அந்த உடலின் முன்பாக வந்து நின்றவளாக முதன்முறையாக தலையை நிமிர்த்தி பார்த்து நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க .. என்று சொல்லிவிட்டு தலையை திரும்பவும் கவிழ்த்திக் கொண்டாள். அப்பாவிடமிருந்து இப்போது எந்த எதிர்ப்பும் வரவேயில்லை. அம்மா பெருமூச்சிட்டு கொண்டபடி தனது அழுகையை சேலையால் துடைத்தபடியே துஷ்டி கேட்டு வந்தவர்களுக்கு கடுங்காப்பி போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்க துவங்கினாள். அப்பாவின் உடல் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் போய் கொண்டிருந்தது. அன்றோடு தனக்கு திருமணமாகி நாற்பத்தி ரெண்டு வருடங்கள் முடிந்து நான்கு மாதங்கள் ஏழு நாட்கள் ஆகியிருந்தது அம்மாவிற்கு நன்றாகவே நினைவிலிருந்தது.

2 ஙப் போல் வளை.

அம்மாவிடம் மதிய சாப்பாட்டின் போதே தாத்தாவை தானே கொல்லப்போவதாக அப்பா சொல்லி கொண்டிருந்தார். நானும் சின்ன அக்காவும் அதை கேட்டுக் கொண்டிருந்தோம். அம்மா மறுப்போ ஆதரவோ எதுவுமே சொல்லவில்லை. சாப்பாட்டை மென்றபடியே அப்பா கடுகடுத்த குரலில் அந்த ஆளு கடைக்கு வர்றவரைக்கும் நான் ஒரு மசிரு கூட சம்பாதிக்க முடியாது. கல்லாவிலே கிடக்கிற சில்லறையை கூட கணக்கு பாத்து வச்சிட்டு போறான். இப்படியே என்னாலே பாத்துட்டு இருக்க முடியாது சௌந்திரம். பெத்தவன்னா.. அவன் இம்சையை எத்தனை நாள் சகிச்சிகிட்டு இருக்கிறது. இன்னைக்கு ராத்திரி அவன் கழுத்தை நெறிச்சி கொல்லப்போறேன். வெளியே யாருக்கும் தெரியாம மறைச்சிட்டு நாளையில இருந்து நான் கடைக்கு போயிருவேன். என்று சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக உள்ளே எடுத்துக் கொண்டு போனபோது கடையிலிருந்து தாத்தா சைக்கிளில் வந்து இறங்கி ஒரமாக மரநிழலில் நிறுத்தி பூட்டிக் கொண்டிருந்தார். அப்பா அவரை பார்க்காதது போல வெளியே போக முயன்ற போது எதுக்குடா வெயிலில் கிளம்பி போறே.. கடையை பூட்டிட்டு வந்துட்டேன். என்று தாத்தா சொன்னதை அப்பா கேட்கவேயில்லை. அம்மா எப்போதும் போலவே அன்றும் மாலையில் உதிரி மல்லிகை பூ வாங்கி கட்டி தலையில் வைத்து கொண்டு அடுத்த வீட்டு பெண்ணோடு ஏதோ ஊர்கதை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா கடையை எடுத்துவிட்டு வரும் பத்தரை மணி வரைக்கும் காத்து கொண்டிருந்தாள். அப்பாவும் தாத்தாவும் ஒரே சைக்கிளில் தான் வீடு திரும்பினார்கள். அப்பா குளித்துவிட்டு சாப்பிட வருவதற்குள் தாத்தா சாப்பிட்டு முடித்துவிட்டு தனது முழங்கால் வலி மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டார். அப்பாவும் அம்மாவும் உறக்கம் வராமல் பாயில் படுத்து கிடந்தார்கள். வெளியே யார் வீட்டிலே ரேடியோ பாடிக் கொண்டிருந்தது எங்கள் காதில் விழுந்தது. அப்பா ரகசியமான குரலில் அந்த ஜன்னலை எழுந்து போய் சாத்திட்டு வா.. என்று சொன்னார். அம்மா மெதுவாக எழுந்து போய் ஒவ்வொரு ஜன்னலாக சாத்திவிட்டு வந்து படுத்து கொண்டாள். அப்பா ஒரத்தில் எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை ஊதி அணைத்ததும் வீடு முழுவதும் இருள் பீச்சியடிக்க துவங்கியது. அப்பா மெதுவாக இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருந்தார். அம்மா அதை கவனிக்காதது போல சுருண்டு படுத்து கொண்டாள். அப்பா கையில் உமி தலையணையை இருந்தது. அப்பா நடந்து சென்றபோது வழியில் கிடந்த தாத்தாவின் வெற்றிலை உரலை மிதித்திருக்க கூடும் அது பலத்த சப்தத்துடன் உருண்டு ஒடியது. அப்பா கையில் தலையணையோடு இருளில் நின்று கொண்டிருந்தார். தாத்தா தனது படுக்கையின் அடியில் இருந்து தீப்பெட்டி ஒன்றை எடுத்து உரசி காட்டினார். அந்த வெளிச்சத்தில் இறுக்கமும் ரௌத்திரமும் நிரம்பிய அப்பாவின் முகம் தெரிந்து மறைந்தது. தாத்தா தொண்டையை செருமிக்கொண்டவராக குடிக்க தண்ணி கொண்டாடா என்று சொன்னார். அப்பா தலையணையை கிழே போட்டுவிட்டு இருட்டிற்குள்ளாகவே நடந்து போய் குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தந்தார். இதற்குள் தாத்தா பூட்டியிருந்த ஜன்னல்களை திறந்துவிட்டு வானில் தெறியும் ஒன்றிரண்டு நட்சத்திரங்களை பார்த்தபடியே இருந்தார். பிறகு ஒரு செம்பு தண்ணீரையும் வாங்கி குடித்துவிட்டு வெளிக்கதவை திறந்து மூத்திரம் போய்விட்டு வந்து படுத்து கொண்டார். மறுநாள் காலை தாத்தா கடைக்கு போகவேயில்லை. சில வாரங்களில் தாத்தா ரொக்கப்பணம் முழுவதையும் அம்மாவிடமே கொடுத்து வைக்க துவங்கினார். இது நடந்து ஆறு மாதங்களுக்கு பிறகு நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்துருக்கு போய் சாமி கும்பிட்டோம். அதன் பிறகு தாத்தாவின் எழுபத்திரெண்டு வயது வரை அப்பா அவரை மிக அன்போடும் பொறுப்போடும் கவனித்து கொண்டார். தாத்தாவும் தனது மகனும் மருமகளும் போல அன்பானவர்கள் யாருமில்லை என்று பேச்சுக்கு பேச்சு சொல்லிக் கொண்டிருப்பார். அவர்களது அந்நியோன்யம் ஊருக்கே ஒரு வழிகாட்டுதல் போலிருந்தது. எங்கள் குடும்பத்தில் அதன் பிறகு எவருக்குள்ளும் எந்த சச்சரவும் நடக்கவேயில்லை.

3 இல்லறம்.

என்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று தேன்மொழி இந்த மலைநகருக்கு வந்த இரண்டு தினங்களுக்குள் நாலைந்து முறை சொல்லிவிட்டாள். ஆனாலும் அவன் விடாபிடியாக அதையே கேட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி நாலைந்து நாட்களே ஆகியிருந்தன. அவன் முதல் இரவில் ஆடைகளே இல்லாமல் பிறந்த மேனியாக உன்னை பார்க்க விரும்புகிறேன் என்று அவளிடம் கேட்டான். அவள் மறுத்து தலையசைத்தபடியே அப்படி என்னால் இருக்க இயலாது. கூச்சமாகயிருக்கிறது என்று சொன்னாள். அவனுக்கு கொஞ்சம் ஆத்திரமாக வந்தது. அவனாகவே அவளது உடைகளை களைந்து எறிய துவங்கினான்.அவளும் முரட்டு தனமாக எதிர்க்க துவங்கினாள். இதனால் கட்டிலில் இருந்து தள்ளியதில் அவன் கிழே விழுந்தான் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் சிரித்து கொண்டிருந்தாள். அவன் அடிபட்ட கையை உதறிக் கொண்டே சொன்னான். நான்உன் புருஷன்டி.. என் கிட்ட எதுக்குடி மறைக்கிறே? அவள் பதில்பேசவில்லை.படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். அவன் பசியோடு தட்டில் வைத்திருந்த ஆப்பிளை கடித்து குதறி தள்ளினான். பிறகு அவளது விருப்பத்தை பற்றிய கவலையின்றி கையை பிடித்து முறுக்கி அணைத்தபடி அவள் உடல் மீது இயங்க துவங்கினான். அவளிடமிருந்த எதிர்ப்புணர்வு மெதுவாக அடங்கி போனது. மறுநாள் இரவு அவர்கள் ரயிலில் தேனிலவிற்காக பயணமானார்கள். அவன் ரயில் பெட்டிக்குள்ளாகவே அவளோடு உறவு கொள்ள விரும்பியவனை போல எல்லோரும் உறங்கிய பிறகு நீ கழிப்பறைக்கு வந்துவிடு என்றான். அவள் எழுந்து போகவேயில்லை. அவன் அந்த இரவில் மட்டும் பத்துசிகரெட்டிற்கும் மேலாக புகைத்திருக்க கூடும். கடுகடுவெனயிருந்தான். பெர்த்தில் சுருண்டு படுத்திருந்த அவளது இடுப்பில் நகத்தால் ஆழமாக கிள்ளினான். அவள் கத்தவேயில்லை. அவர்கள் மலைநகரின் சரிவில் இருந்த விடுதியில் தங்குவதற்காக அறை எடுத்து கொண்டார்கள். பெட்டிகளை உள்ளே வைத்துவிட்டு ரூம்பாய் வெளியேறிய மறுநிமிசம் அவன் ஆத்திரத்தோடு ராத்திரி பூரா நொந்து போய் கிடந்தேன் தெரியும்லே என்றபடியே மூர்க்கமும் காம வேகமுமாக அவளை படுக்கையில் தள்ளி கூடிவிட்டு அப்படியே உறங்க துவங்கினான். அவள் எழுந்த போது படுக்கையில் மூத்திரவாடை குமட்டிக் கொண்டு வந்தது. அப்படியே உள்ளே போய் குளித்துவிட்டு வரும்போது கவனித்தாள். முழங்கையில் இடித்து கீறல் ஏற்பட்டிருந்தது. வலியில் அழுகை வந்தது. கதவை திறந்து வெளியே போய் நின்று சில நிமிசங்கள் அழுதுவிட்டு உள்ளே வந்து சோபாவில் சுருண்டு படுத்து கொண்டாள். அவன் விழித்து எழுந்தவுடனே பல் துலக்குவதற்குள் அவளை கட்டிக்கொண்டு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சிரித்தான். அவள் பலவீனமாக முகத்துடன் சிரித்தாள். அவன் காலை உணவை முடித்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு புல்தரை நீண்டுள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றான். அவளை புல்தரையில் உட்கார வைத்து நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டான். பிறகு அவள் காதில் இப்படியே புல்தரையில் படுத்துக் கொண்டு உறவு கொண்டால் எப்படியிருக்கும் தெரியுமா? என்று சொல்லி சிரித்தான். அவளுக்கு உடம்பில் நடுக்கம் ஏற்பட துவங்கியது. புல்தரை பக்கம் திரும்பி பார்க்க முடியவேயில்லை. மதியம் அவன் அறைக்கு திரும்பிய பிறகு தனது நண்பன் ஒருவனுக்கு போன் செய்து பீர் குடித்துவிட்டு உறவு கொண்டால் நன்றாகயிருக்குமா என்று ஏதோ ஆலோசனைகள் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு சாப்பிட்டுவிட்டு அறையின் கதவுகளை மூடி அவளோடு திரும்பவும் கூடினான். மாலை அவர்கள் ஒரு ஆங்கில படத்திற்கு போனார்கள். அங்கும் அவளிடம் உன்னை முழுசாக பார்க்க வேண்டும் என்று சொன்னது நினைவிருக்கிறதா என்று கேட்டான். அவள் பதில் சொல்லவேயில்லை. அன்றிரவு அவன் வெற்றிவீரனை போல அவள் நிர்வாண உடலை வெறித்து பார்த்து கொண்டிருந்த போது அவளுக்கு வந்த அழுகையை அடக்கி கொண்டிருந்தாள் . அவன் சில நிமிசங்கள் அந்த உடம்பை வெறித்து பார்த்து கொண்டிருந்துவிட்டு ஏமாற்றம் அடைந்தவன் போல ஒரு சிகரெட் பற்றவைத்து புகைத்துவிட்டு அவளை படுக்கையில் தள்ளினான். தேனிலவிற்காக ஆறு நாட்கள் அவனோடு மலைநகரில் தங்கியிருந்தாள். அதற்குள் இருபது தடவைக்கும் மேலாக அவர்கள் ஒன்றாக கூடியிருந்தார்கள். மலையை விட்டு கிழே இறங்கி வரும் போது அவள் உடல் வெளிறிப் போய் முகமெல்லாம் அசதி கொண்டது போல இருந்தாள். அவன் பஸ்ஸின் இன்னொரு சீட்டில் இருந்த கல்லுரி மாணவியை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அடுத்த சில நாட்களில் அவன் தனது விடுமுறை முடிந்து அலுவலகம் செல்வதற்காக ஆயுத்தம் ஆனான். தேன்மொழியும் அவனோடு புதுக்குடித்தனம் செய்ய புறப்பட்டாள். சந்தோஷமா வச்சிகிடுங்க மாப்பிள்ளை என்று சொல்லி அவனிடம் ஒப்படைத்துவிட்டு தேன்மொழியின் குடும்பமே பிரியாவிடை கொடுத்தது. தேன்மொழியும் மற்ற பெண்களை போல அம்மா வீட்டை விட்டு போகும் துக்கத்தில் அழுது கொண்டிருந்தாள். அதன்பிறகு எல்லா பெண்களை போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக் கொண்டவளை போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள துவங்கினாள். அவர்களது இனிமையான இல்லற வாழ்க்கை இப்படிதான் துவங்கியது.
_____________________________________________________________________________________

எல்லா நாட்களையும் போல.

ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது பழனியப்பனின் செல்போன் அடித்தது. அவன் இரைச்சல் சப்தத்தை விட்டு ஒரமாக நின்று பேச துவங்கினான்.

கையில் பணப்பையை வைத்து கொண்டு நான் எப்போதும் போலவே கண்ணாடி கதவை திறந்து வங்கியின் உள்ளே நுழைந்தேன். வாசலையொட்டி நின்றிருந்த நடுத்தர வயது நபர் கையில் இருந்த சிறிய காகிதம் ஒன்றை பலமாக ஊதியது தெரிந்தது. மறுநிமிசம் என் கண்கள் எரிய துவங்கியது. ஒரு நிமிசம் என்னையும் அறியாமல் கைகளால் இரண்டு கண்களையும் தேய்க்க துவங்கினேன். மிளகாய் பொடி பட்டது போல திகுதிகுவென எரிய துவங்கியது.

கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்க்கும் போது நான் கொண்டு வந்திருந்த லெதர் பை காணமல் போயிருந்தது. என்னால் நம்ப முடியவேயில்லை. என் கையிலிருந்த பணம் ஆறுலட்சத்திநாற்பதினாயிரம் பறிபோய்விட்டிருக்கிறது. என்னால் கத்த முடியவில்லை. கைகள் நடுங்க துவங்கின. சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் போலவே காசாளார் கத்திக் கொண்டிருந்தார். பணம் செலுத்துவதற்காக நாலு பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். ஒரு ஆள் நாலைந்து மஞ்சள் நிற ஸ்லீப்புகளை நிரப்பிக் கொண்டிருந்தார்.

என்னிடமிருந்த பணத்தை பறித்தது யாராகயிருக்கும். அந்த ஆள் இவ்வளவு நேரம் இங்கேயே நின்று கொண்டிருப்பானா என்ன? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களில் எரிச்சல் அதிகமாகி நீர்வடிந்து கொண்டிருந்தது. பழனியப்பன் என் தோளில் கைவைத்தபடியே என்ன சார் என்றபோது தான் எனக்கு தன்னிலை உணர துவங்கியது.

பணம் போய்விட்டது. பழனியப்பனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. தொண்டையில் வலி ஏற்பட்டு உடல் நடுங்க துவங்கியது. முகம் வியர்த்து வழிந்திருக்க வேண்டும். பழனியப்பன் என் கையில் பையில்லாததை கண்டுபிடித்தவனை போல என்ன சார் ஆச்சி என்று கத்தினான். யாரோ பணத்தை திருடிட்டாங்க என்று நான் மென்றுவிழுங்கி சொன்ன மறுநிமிசம் வங்கியே ஸ்தம்பித்து போகுமளவு பழனியப்பன் கத்தினான்.

கண்ணாடி கதவுகள் சாத்தப்பட்டன. வங்கியின் மேலாளரும் அலுவலக ஊழியர்களும் என்னை சுற்றிலும் நின்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். வங்கியின் காவலர் சந்தேகத்துக்கு உரியவராக யாரும் வெளியே செல்லவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பழனியப்பன் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தான்.

வங்கியினுள்ளே நின்றிருந்தவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த திருட்டு கொடுத்த பழைய சம்பவங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மேலாளர் தனது அறைக்குள் வரும்படியாக என்னை அழைத்து கொண்டு போனார். . திடீரென அந்த வங்கி இதற்கு முன்னதாக நான் பார்த்து அறியதா ஒரு புதிய இடம் போல தோற்றமளிக்க துவங்கியது. கண்ணாடி தடுப்புகள். கணிப்பொறி. மேஜை மீதுள்ள கண்ணாடி கோளம் யாவும் விசித்திரமான பொருட்கள் போல தெரிந்தன.

மேலாளர் அறை சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் காலண்டரில் இருந்த குழந்தை ஏன் இத்தனை நாட்கள் கண்ணில் படவேயில்லை. அந்த குழந்தை என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. அந்த குழந்தை யாராக இருக்கும். அதற்கு நான் திருட்டு கொடுத்த விபரம் தெரியுமா? நான் அதை உற்று பார்ப்பதை விரும்பாமல் தலையை தொங்கிவிட்டு கொண்டிருந்தேன்.

வங்கிக்கும் எனக்குமான உறவு ஆறாண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அநேகமாக தினமும் ஒருமுறை இங்கே வந்து போயிருக்கிறேன். ஊழியர்களுக்கு என்னை எளிதாக அடையாளம் தெரிந்திருந்தது. ஆனால் இன்றைக்கு அது எதுவும் பலன் அளிக்கவில்லை. வங்கியின் கணக்காளராகயிருந்த பெண்மணி ரொம்ப நாளாக உங்களை கவனிச்சிட்டு இருந்தவங்க தான் யாரோ திருடியிருக்கிறாங்க என்று சொன்னாள். என்னை யார் தினமும் கவனித்து கொண்டிருந்திருப்பார்கள்.

நான் என்ன உடை உடுத்துகிறேன். எப்படி தலைசீவியிருக்கிறேன் என்பதில் என் மனைவிக்கே அக்கறை கிடையாது. அநேகமாக எனக்கே அது தன்னிச்சை செயல்போல தான் நடக்கிறது. என்னை கவனித்து கொண்டேயிருந்த மனிதன் எப்படியிருந்திருப்பான். என்னை பற்றி எந்தவிதமான எண்ணங்கள் கொண்டிருப்பான். அவன் முகம் எவ்வளவு யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.

வங்கியின் காசோலைபிரிவில் உள்ள கண்ணாடி அணிந்த பெண் சார் எப்பவும் எதையோ யோசிச்சிகிட்டு வேற நிப்பாரு.. நானே பாத்திருக்கேன். ஒரு நாள் பேனாவை மூடிகிட்டே கையெழுத்து போட்டாரு.. எனக்கே சிரிப்பா இருந்துச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அது எல்லோருக்கும் ஏற்படகூடிய ஞாபககுறைவு தானில்லையா? ஏன் என்னிடம் இத்தனை நாள் அவள் இதை சொல்லவேயில்லை. ஒருவேளை மற்ற அலுவலர்கள் இதை பற்றி பேசி சிரித்திருப்பார்களா? நான் அவர்களில் எவரையும் நேர் கொண்டு பார்க்கவிரும்பவில்லை

பழனியப்பன் அலுவலகத்திற்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். எனது அலுவலகத்திலிருந்து உயரதிகார் திருட்டு எப்படி நடந்தது என்பதை பற்றி விசாரிக்க துவங்கினார். என்னால் கோர்வையாக பதில் சொல்ல முடியவில்லை. தான் அங்கே வருவதாகவும் அதன் பிறகு காவல் நிலையம் செல்லலாம் என்றும் உறுதியாக சொன்னார்.

இந்த நாற்பத்திரெண்டு வயது வரை நான் பறிகொடுத்தவை எல்லாம் அற்பமான பொருட்கள் மட்டுமே. ஒரு முறை திருப்பதி போகும்போது எனது சூட்கேஸ் ஒன்றை யாரோ ரயிலில் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மற்றவகையில் நான் ஏமாந்தவை யாவும் சில்லறைகாசுகள். தலைவாறும் சீப்பு. குடை. ஒன்றிரண்டு டிபன்பாக்ஸ், வாழைப்பழங்கள் இவ்வளவு மட்டுமே.

வங்கி மேலாளர் என்னை பற்றிய சுயவிபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். ஆறுவருடத்திற்கும் மேலாக தினமும் இதே வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் மேலளாருடன் பேச வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் என் பெயரை கேட்டு கொண்டதேயில்லை. இன்றைக்கு முதல்முறையாக எனது பெயர் வீடு எங்கேயிருக்கிறது. பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்பதை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்.

பழனியப்பன் வெளியில் நின்றபடியே யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கடுமையேறியிருந்தது. எனது உயரதிகாரி வந்து சேர்ந்து வங்கிமேலாளருடன் ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் என்னையும் பழனியப்பனையும் மட்டும் காவல் நிலையம் அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். ஆனால் அலுவலகத்தின் காரை உபயோகபடுத்த வேண்டாம், ஆட்டோ பிடித்து போய் வரவும் என்று உயரதிகாரி கண்டிப்புடன் கூறினார்.

என்னை கைது செய்வார்களா என்று பயமாகயிருந்தது. பழனியப்பனிடம் இதை பற்றி எப்படி கேட்பது என்று கூச்சமாகயிருந்தது. ஒரு வேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வது. உடனே ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்களா? வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன்பாக்சை என்ன செய்வது? அலுவலகத்தில் உள்ள வேறு யாரையாவது சாப்பிட சொல்லிவிட வேண்டும். நேரமாகி விட்டால் அது கெட்டு போய்விடும். யாரை சாப்பிட சொல்லலாம் என்ற யோசனை திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது.

பழனியப்பனுக்கு என்னோடு பேசுவதற்கு பிடிக்கவில்லை போலும். அவன் ஆட்டோவில் இருந்தபடியே சாலையை வெறித்து பார்த்துக் கொண்டு வந்தான். நான் அவனிடம் தயங்கி தயங்கி என்னை கைது செய்தால் வீட்டுக்கு தகவல் தெரியப்படுத்துவார்களா என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. என்னால் அவனுக்கு அதிக சிரமமில்லையா என்று மறுபடியும் கேட்டேன். அவன் ஆத்திரத்துடன் நீ ஒரு மசிரும் பேச வேண்டாம். உன்னாலே நானும் தாலி அறுக்க வேண்டியிருக்கு என்று கோபத்தோடு சொன்னான்.

பழனியப்பன் எனக்கு கீழ் வேலைபார்க்கும் ஊழியன். இதுவரை அவன் இப்படி என்னிடம் பேசியதில்லை. பல நாட்கள் நாங்கள் வங்கியில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து இண்டியானா பேக்கரியில் சாவகாசமாக அமர்ந்து பிளம்கேக்குகள் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு முறை பழனியப்பன் வங்கிக்கு என்னோட துணைக்கு வரவேயில்லை. நானோ அவன் என்னோடு சேர்ந்து வந்ததாக ரிஜிஸ்தரில் பதிவு செய்திருக்கிறேன். இவ்வளவு இருந்தும் இன்றைக்கு அவன் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு அதிருப்தி தருவதாகயிருந்தது.

போலீஸ் ஸ்டேஷனிற்கு இதற்கு முன்பு நான் சென்றதேயில்லை. பேருந்தில் பயணம் செய்யும் போது ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். அதுவே அச்சம் தருவதாகயிருக்கும். எப்போதும் உள்ளே சிலரை லத்தியால் அடித்து கொண்டேயிருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கிருந்தது. சில திரைப்படங்களில் அப்படி காவல்நிலையங்களை காட்டியதும் நினைவிலிருக்கிறது.

நாங்கள் சென்ற காவல்நிலையம் மிக நவீனமாக இருந்தது. உள்ளே யாரையும் அடிக்கும் சப்தம் கேட்கவில்லை. காவலர்கள் அதி நவீன செல்போன்கள் வைத்திருந்தார்கள். கம்ப்யூட்டர் திரை முன்பாக உட்கார்ந்திருந்த ஒரு காவலரிடம் பழனியப்பன் ஏதோ சொன்னதும் எங்களை உள்ளே அழைத்து சென்றார்கள். இளவயதிலிருந்த போலீஸ் அதிகாரி விசாரிக்க துவங்கினார். வங்கி மேலாளர் கேட்ட அதே கேள்விகள். அதேபதில்கள்.

திருட்டை கண்டுபிடித்துவிடலாம் என்று ஆறுதல் சொல்லியபடியே இரண்டு நாட்களுக்கு பிறகு வரும்படியாக அனுப்பி வைத்தார். பழனியப்பன் தனக்கு வேலையிருக்கிறது என்று சொல்லி என்னை மட்டும் தனித்துவிட்டு கிளம்பி சென்றான். பேருந்தில் அலுவலகம் செல்லலாம் என்ற யோசனையோடு காத்திருக்க துவங்கினேன்.

பரபரப்பாக வாகனங்கள் போவதும் வருவதுமாகயிருந்தன. நகரில் எத்தனையோ ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் எவன் என்னிடமிருந்த பணத்தை திருடி சென்றது. ஒரு ஆளாக இருக்குமா அல்லது கும்பலா? என்னை போல பணம் பறி கொடுத்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். அந்த பணத்தை என்ன செய்வார்கள்.? ஒவ்வொரு நாளும் என்னை போல யாரோ சிலர் இப்படி திருட்டு கொடுத்துவிட்டு புலம்பி கொண்டுதானிருப்பார்கள் இல்லையா? உடம்பு முழுவதும் எறும்பு ஊர்வது போல ஏதோ கேள்விகள் என்மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

என்ன யோசனை இது என்று என் மீதே எனக்கு ஆத்திரமாக வந்தது. நடந்தே அலுவலகம் செல்வது என்று முடிவு செய்து நடந்து செல்ல துவங்கினேன். இந்த நேரம் அலுவலகம் முழுவதும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருந்தால் மரகதம் அழுது கொண்டிருப்பாள். அல்லது பள்ளியிலிருந்து பிள்ளைகளை கூட பாதியில் அழைத்து கொண்டு வந்திருப்பாள்.

அவளுக்கு போன் செய்து பேசலாமா என்று தோணியது. ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அலுவலகத்திலிருந்து அவளுக்கு ஒரு முறை கூட போன் பண்ணி பேசியதேயில்லை. பொதுவாக வீட்டிலேயே அவளுடன் பேசுவது குறைந்து போய் தானிருந்தது. இந்த வருடம் அவர்கள் கல்யாண நாளை கூட இருவருமே மறந்து போயிருந்தார்கள். அதைப்பற்றி பிறகு நினைவு வந்த போது அவர் வெளிக்காட்டி கொள்ளவேயில்லை.

நடக்க நடக்க தான் காணாத நகரம் ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருப்பது போலவே இருந்தது. சாலையோரம் உள்ள மரநிழலில் ஒரு ஆள் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். வாகன இரைச்சலோ, ஜனநடமாட்டமோ அவனை எதுவும் செய்யவில்லை. உறக்கத்திலும் அவன் முகத்தில் சிரிப்பு கசிந்து கொண்டிருந்தது. தான் வாழ்நாளில் ஒரு முறை கூட இப்படி சாலையில் உறங்கியதில்லை. ஒரு வேளை உறங்க வேண்டிய சந்தரப்பம் வந்தால் கூட இப்படி தன்னால் உறங்க முடியுமா என்று தெரியவில்லை.

கட்டிடங்கள், விளம்பர பலகைகள், சாலையோர கடைகள் என யாவும் புதிதாக தெரிந்தன. அலுவலகம் வந்து சேர்ந்த போது யாரும் அவனோடு பேசவேயில்லை. உயரதிகாரி மட்டும் அவனை தற்காலிக நீக்கம் செய்திருப்பதகாவும் அவன் திருட்டு கொடுத்த பணத்தை ஒருவாரத்திற்கு திரும்ப செலுத்த வேண்டியது அவனது பொறுப்பு என்றும் அப்படி செலுத்த முடியாவிட்டால் அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.

தனது சம்பளம் முழுவதையும்ம பிடித்து கொண்டால் கூட இந்த பணத்தை கட்டுவதற்கு ஏழுட்டு வருசங்களாகிவிடும். அதுவரை வீட்டிற்கு என்ன செய்வது என்று குழப்பமாகயிருந்தது. தனது மேஜையின் அடியிலிருந்து டிபன்பாக்சையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து கொண்டு கிழே வரும் போது கடைநிலை ஊழியர் ஒருவர் தன்னை பற்றி ஏதோ சொல்லி சிரிப்பது தெரிந்தது.

வீட்டிற்கு போவதற்கு மனதில்லை. வங்கிக்கு திரும்ப சென்று ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா என்று கேட்கலாம் என தோணியது. ஒரு ஆட்டோ பிடித்து வங்கிக்கு போன போது உள்ளே கூட்டமேயில்லை. காலையில் நடந்த சம்பவத்தின் அறிகுறியே அற்றது போல இயங்கி கொண்டிருந்தது.

மேலாளர் அறைக்கதவை தள்ளி உள்ளே போனபோது அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். போலீசில் புகார் கொடுத்து வந்த விபரத்தை சொன்ன போது அவரிடம் எந்த முகமாற்றமும் இல்லை. தேநீர் குடித்து முடித்துவிட்டு எங்களாலே ஒரு உதவியும் பண்ண முடியாது. இது உங்க தப்பு என்றபடியே எழுந்து வங்கியின் உள்ளே செல்ல துவங்கினார். அந்த அறையில் தனித்து இருந்த போது சுழன்று கொண்டிருக்கும் காற்றாடி கூட என்னை திருட்டு கொடுத்தவன் என்று திரும்ப திரும்ப சொல்வது போலவேயிருந்தது.

ஐந்துமணிக்கு வெளியே வந்த போது வங்கியின் முத்திரைபோடுகின்றவன் என்னை தனியே அழைத்து இப்படி திருட்டு போறது இந்த பேங்கில நாலைந்து தடவை நடந்திருக்கு..நீங்க எதுக்கும் வெட்டுவான் கோயில்வரைக்கு போய் காசை வெட்டி போட்டு பாருங்க. திருடிட்டு போன பயலுக யாரா இருந்தாலும் ரத்த கக்கி செத்துபோயிருவாங்க என்றான்.

என்னால் அதை நம்பமுடியவில்லை. அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. வெட்டுவான் கோவில் எங்கேயிருக்கிறது என்ற விபரத்தை கேட்டு கொண்டு பேருந்தை பிடித்து பிராட்வேயில் உள்ள குறுகலான தெருக்களை தாண்டி போனபோது சிறிய கோவிலாக இருந்தது. துண்கள் கருமையேறியிருந்தது. ஆனால் கோவிலுக்குள் நிறைய கூட்டமிருந்தது.

பூசாரி ஒருவர் என்னிடம் திருடு போயிருச்சா என்று கேட்டார். நான் தலையசைத்தவுடன் பைக்கா? பர்சா என்னது என்று மறுபடியும் கேட்டார். அலுவலக பணம் என்று சொன்னதும் அவர் இதுக்கு எலுமிச்சைபழம் வெட்டி போடணும். இருநுறு ரூபாய் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு உள்ளே அழைத்து சென்றார்.

எண்ணெய் விளக்கின் நெடி நாசியில் ஏறியது. உள்ளே பத்திற்கும் அதிகமானவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பூசாரி அவர்களும் திருட்டு கொடுத்தவர்கள் தான் என்று சொன்னார். ஏனோ அவர்களை பார்க்கையில் சற்று ஆறுதலாகயிருந்தது. எல்லோரது கண்களிலும் பயம் ஒளிந்து கொண்டிருந்தது. வயதை மறந்து அவர்களோடு நெருக்கமாக இருப்பது போன்று தோன்றியது.

பூசாரி எலுமிச்சம்பழங்களை குங்குமம் பூசி அறுத்து போட்டுக் கொண்டிருந்தான். ரத்தம் போலவே சொட்டிக் கொண்டிருந்தது. திருட்டு கொடுத்தவர்களுக்காகவே இப்படியொரு கோவில் ஒன்றிருப்பது இன்று தான் எனக்கு முதல்முதலில் தெரிந்திருக்கிறது.

இந்த நகரில் இதுவரை எவ்வளவு திருட்டு நடந்திருக்கும் . ஏன் தினசரி பேப்பர் வாசிக்கையில் திருட்டு நடந்ததுபற்றிய செய்திகள் இதற்கு முன்பாக நமக்கு அதிரச்சியளிக்கவில்லை என்று யோசனையாக இருந்தது.

ஒரு வேளை நாளை காலை என்னைப்பற்றியும் செய்தி வெளியாகும். புகைப்படத்தோடு வெளியிடுவார்களா என்று தெரியாது. நான் சமீபமாக புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை. ஒரு வேளை பழைய புகைப்படம் எதையாவது வெளியிடுவார்களாக இருக்கும். இப்படிதான் இதற்கு முன்னால் வெளிவந்த திருட்டு கொடுத்த மனிதர்களின் புகைப்படங்களுக்கு பழையதாக இருந்திருக்குமா?

மனது ஒரு இடத்தில் நிற்கமறுத்து அலைந்து கொண்டேயிருந்தது. கோவிலில் தீபராதனை காட்டும் மணிச்சப்தம் கேட்டது. பூசாரி என்னிடம் பாதி எலுமிச்சைபழம் ஒன்றை தந்து ஒரு ருபாய் காசை வெளியே உள்ள பீடத்தில் வைத்து வெட்டி போடும்படியாக சொன்னார். ரத்தம் போல வடியும் எலுமிச்சை பழத்தை வாங்கி கொண்டு வெளியே வந்தேன்.

ஒரு முரட்டு ஆள் பலிபீடத்தின் அருகே நின்றபடியே காசை வெட்டி போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தந்தேன். அவன் ஒங்காரத்தோடு வெட்டி துண்டாக்கினான். பலிபீடத்தின் கீழே எண்ணிக்கையற்ற நாணயங்கள் துண்டாகி கிடந்தன.

கோவிலை விட்டு வெளியே வரும்போது இருட்ட துவங்கியிருந்தது. வழக்கமாக இந்த நேரம் வீட்டிற்குபோயிருப்பேன். அதன் பிறகு காலை அலுவலகம் கிளம்பும் வரை வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். ஆனால் இன்றைக்கு இங்கேயே இருட்ட துவங்கியிருந்தது.

நான் திருட்டு கொடுத்தவன். ஜெயிலுக்கு போக இருப்பவன். எனது வாழ்நாள் எண்ணப்பட்டுவிட்டது. இனிமேல் நான் வேறுவிதமான வாழ்க்கைக்கு பழகி கொள்ள வேண்டும். கோவிலை விட்டு நடந்து பேருந்தில் ஏறி கடற்கரையை அடைந்த போது கடற்கரை கொள்ளாமல் மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

வயதான குதிரையொன்று தனியே மணலை மேய்ந்து கொண்டிருந்தது. கடற்கரை மணலில் நடந்து உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன். தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நடைபயிற்சி செய்கின்றவர்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் நடைபயிற்சி செய்கின்றவன் இல்லை. எனது குழந்தைகள் கடற்கரையில் இப்படி விளையாடியதில்லை. இத்தனை மனிதர்களுக்கு நடுவிலும் நான் தனித்து இருப்பது போலவேயிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் மணலை கை நிறைய அள்ளி அள்ளி கொட்டிக் கொண்டேயிருந்தது.

மணலில் புதைந்து கிடந்த ஒரு சாவியொன்று கையில் அகப்பட்டது. வீட்டு சாவிபோலயிருந்தது. யாருடைய வீட்டு சாவியது. யார் தொலைத்திருப்பார்கள்.தொலைந்த மனிதன் அன்று கடற்கரையெங்கும் தேடியிருப்பான் இல்லையா? அந்த சாவியை என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்தபடியே இருந்தேன்.

எவ்வளவு நேரம் கடற்கரையில் இருந்தேன் என்று தெரியாது. நியான் வெளிச்சம் கடல் மணலில்ஒளிர்ந்து கொண்டிருந்தது. காற்று மெல்ல என் உடலை தழுவி ஆடையை நெகிழ செய்து கொண்டிருந்தது. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் என்னருகே தழுவிக் கொண்டிருந்தார்கள். கடலின் சப்தம் மனதை சாந்தம் கொள்ள செய்திருந்தது. கடற்கரையில் கிடக்கும் கோடான கோடி மணல்துகள்களில் ஒன்று தான் தானும் என்று தோணியது.

ஆகாசம் நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நெடுநேரம் வெளியே இருந்துவிட்டேன் என்று தோணியது. காலையில் இருந்து மனது கொண்டிருந்த பரபரப்பு அடங்கியிருந்தது. வீடு வந்து சேர்ந்த போது குழந்தைகள் உறங்கியிருந்தார்கள். என்னை பார்த்த மாத்திரத்தில் மனைவி கதறி அழத்துவங்கினாள். அவள் சப்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருப்பவர்கள் சிலர் வந்து சேர்ந்தார்கள். என்னிடம் மாறி மாறி எப்படி பணத்தை தொலைத்தீர்கள் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் கூட எழுந்து வந்து அழத் துவங்கின. என் வீட்டில் இவ்வளவு அழுகையை நான் கேட்டதேயில்லை. யாருக்கும் பதில் பேசாமல் நின்று கொண்டேயிருந்தேன். அருகாமை வீட்டு பெண் தனக்கு நினைவுள்ள பழைய திருட்டு சம்பவம் ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் என் மனைவி அழுது கொண்டிருந்தாள் என்று தெரியாது.

எனக்கு பசிக்க துவங்கியிருந்தது. காலையிலிருந்து நான் எதுவும் சாப்பிடவில்லை என்று உணர துவங்கியது. அவளிடம் பசிக்கிறது என்றேன். அவள் அதான் எங்களை விழுங்கிட்டு வந்துட்டீங்களே .. இனிமே நாங்க பிச்சை எடுத்து தான் சாப்பிடணும் என்று கத்தினாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எதை நம்புவது என்று தெரியவில்லை.

தெரியாமல் நடந்துவிட்டது என்று நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தேன். அதை யாரும் கேட்டு கொண்டது போல தெரியவேயில்லை. வீடும் பிள்ளைகளும் மனைவியும் கூட யாரோ போல தெரிந்தார்கள். எனக்கு என் மீதே ஆத்திரமாக வந்தது.

அப்போது கூட என்னிடமிருந்த பணத்தை திருடிய மனிதன் விழித்து கொண்டிருப்பானா? துங்கியருப்பானா ? அவன் மனைவிக்கு திருடிய விஷயம் தெரிந்திருக்குமா? அவனது பிள்ளைகள் பணத்தை எண்ணியெண்ணி பார்த்து சிரிப்பார்களா என்ற எண்ணம் வந்து கொண்டே தானிருந்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு துக்கமும் வலியும் தாளமுடியாமல் நான் தனியே அழத்துவங்கினேன். அப்போது யாவும் மறந்து வீடே உறங்கி கொண்டிருந்தது.