preload preload preload preload

Tuesday, September 2, 2008

அசரீரி சிறுகதை

இன்று என் தேசத்தில் பதினெட்டாவது சுஹதாக்கள் தினம்

1990 ஓகஸ்ட் 03ம் திகதியின் நினைவுகள் எனக்குப் பெருமளவு இல்லாத இரண்டரை வயதுதான் என்றாலும் அது எனக்கு இன்றுவரை ஒரு சுவடாக சுவடின் வழிச் செய்தியாகக் கடத்தப்பட்டு வருகின்ற விதம் என்னை விட்டும் நீங்க முடியாத இடத்தைப் பெறவைத்திருக்கிறது.

இரண்டு பள்ளிவாசல்களுக்குள் இரவு 8.14 மணியளவில் அவர்கள் நுழைந்தார்கள்.
ஒன்று காத்தான்குடி மீராஜும்ஆப் பள்ளிவாயல் மற்றையது காத்தான்குடி குசைனியாத் தைக்கா பள்ளிவாயல்.தொழும் போது நாங்கள் மிகவும் நேராக நிற்போம்.

அது அவர்களின் எந்தப் போர்த்திறமையையும் அவசியமாக்கவில்லை.
யாரும் ஓடித்தப்புவதற்கு அங்கே முயற்சி செய்யவுமில்லை.
அல்லாஹ்வை அழைத்தவர்களாக அவனிடம் திரும்பிப் போனார்கள்.

முதலில் கிரனைட்டைத்தான் வீசியிருக்கிறார்கள்

அது சரியாக சுஜுதுக்குச் ( நிலத்தில் நெற்றியைப் பதிக்கின்ற தொழுகையின் தருணம் ) செல்லும்போதுதான் நடக்கத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்தும் சுட்டிருக்கிறார்கள்

தம்மை வீர வேங்கைகள் எனச் செல்லிக்கொள்ளும் அவர்கள் ஒருவரையும் நெஞசில் சுடவில்லை அன்றிரவில்.

அவர்கள் தொழும் போது மட்டுமல்ல சுட்ட பின்னரும் கூட கிட்டத்தில் வந்து பார்க்கத் துணியவில்லை.

நிறையப் பேர் அப்படியே படுத்தவர்களாக உயிர் தப்பி இன்றும் இருக்கிறார்கள்
அவாகளில் மிக அதிகமானோர் காயம்பட்டவர்கள், ஊனமானவர்கள்.
இன்று வரை அதன் ஊபாதையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.
ஏதோ தீண்டத்தகாத குற்றவுணர்வினாலேயே அவர்கள் எட்டத்தில் நின்றே முடித்துவிட்டு அப்படியே திரும்பியிருப்பார்கள் என்று எனக்கு இன்னும் மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் மரணித்தவர்களைவிட இரண்டு மடங்குபேர் உயிர்தப்ப வைக்கப்பட்டார்கள்.இல்லாமையின் துயரம் பற்றி நாம் எல்லோருமே அறியக்கூடிய உயிர்ச் சாட்சிகளை இன்றுவரை அந்தக் குடும்பங்களிடமிருந்து வாசிக்க முடியும்

ஏக்கம் தருகின்ற இலக்கியத்தின் வரிகள் போல..

நான் என் இன்று வரையான வாழ்நாளில் அதை வாசித்துக் கொண்டிருப்பவன்.

இதுவரை அறிந்து வைத்திருக்கினற உலகின் படுகொலை வரலாறுகளில் இப்படிக் கொடூரம் நிறைந்ததாக, ஒரு சமுகத்தின் உரிமையைக் கொச்சைப்படுத்துகிற விதமாக நடந்த திரட்சியான கொலை இதுவாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
நாங்கள் ஏழு வயதில்தான் தொழத் தொடங்குவோம்.
ஆனாலும் ஆறு வயதிலிருந்து அந்தப் பள்ளிக்குள்ளிருந்து ஜனாஸாக்கள் எடுக்கப்பட்டன.
எங்களின் இனத்தனித்துவமும், அதன் நிலம்சார் பூர்வீக உண்மைகளும் புலி இயக்கத்தின் போராட்டத்திற்கோ தமிழ்த் தேசியக் கோரிக்கைக்கோ தடையாக இருந்து வந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை. எவ்வாறிருப்பினும் வேலுப்பிள்ளை பிரபாகரன்
எங்கள் பள்ளிகளை இப்படிச் சீர்குலைக்கஎண்ணியதற்கான நியாயத்தை,
ஆகக் குறைந்தது காரணத்தையேனும் இன்னமும் தெளிவாகச் சொல்கிறாரில்லை.

எந்தவொரு சமுகத்தின் கோரிக்கையும் போராட்டமும் நியாயமாக இருக்கின்ற போது அதில் வேறெந்த சமுகத்தின் இருப்பும் அதைத் தடுக்கவோ அச்சுறுத்தலாக அமையவோ முடியாது என்பதே யதார்த்தம்.

அப்படியிருந்தும் எங்கள் மீது தமிழ்த் தேசியப் போராட்டம்
குற்றஞ் சுமத்துகிறதாயின் அதன் தமிழீழ வரையறையும், கோரிக்கையும் எங்களின் விருப்பமில்லாதவகையில் எங்களையும் திணித்து அதற்குள் அடக்கிக் கொண்டதாக இருக்கிறதா? என்ற கேள்வியை அதன் நியாயப்பாட்டின் மீதே எழுப்புகிறது.
தனியான இன, மொழி, கலாசார, வரலாற்றுத் தனித்துவங்களை ஒரு சமுகம் கொண்டிருக்கின்ற போது அதேயளவான இன்னொரு சமுகத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகச் சொல்வதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அப்படியானால் எங்களை இன, மொழி, வரலாற்று, பூர்வீக, நில, அரசியல் இல்லாத குழுவாகவா உங்கள் கோரிக்கைக்குள் வரையறுத்து வைத்திருக்கிறீர்கள்? எங்களுக்கென்று வரலாறு தந்துவிட்டிருக்கின்ற சுயநிர்ணயத்துக்கான உரிமையை எப்படி நாங்கள் இல்லாததாக்கிவிட முடியும்? என்ற கேள்வி எழுகிறது.நியாயமில்லாத கொலைகளின் பின்னாலிருந்துதான் ஒரு தேசக் கோரிக்கை விடுக்கப்படுகிறதென்றால், தனித் தாயகமொன்றுக்கான வேண்டுதலை போரைச் செய்ய முனைகிறார்களென்றால் அது வெல்லப்படுவது எங்ஙணம் என்றும் கேட்கத் தோன்றுகிறது.


"சகப்பான சம்பவங்கள்", "மறக்கப்பட வேண்டியவை" என்பதற்குள் எங்களின் பெண்களின், பிள்ளைகளின், ஆண்களின் துயர்களை புதைத்துவிடலாம் என்ற மூடத்தனத்துடன்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
இதை வாசிக்கின்ற உங்கள் எல்லாரையும் நான் கூப்பிடுகிறேன்.
சன்னங்களால் துளையிடப்பட்ட எங்களின் பள்ளிவாயல்கள் இன்று வரை ஆயிரம் கண்களாலும் அழுகொண்டிருப்பதன் குறியீட்டை முதலில் புரிந்து கொள்ள உங்களை அழைக்கிறேன்.நாங்களாக உருவாகியிருக்கிற எங்களின் தேசத்தில் சுவடாகிப் போன அந்தப் பள்ளிகளின் துயர்களிலிருந்து நாம் அரசியலையும், எம் இனத்தையும், வரலாற்றையும் மீள வாசித்துப் பார்ப்போம்.

அதிலிருந்து கேட்கத் தொடங்குவோம் நேற்றிரவு தந்த கடைசியான முத்தத்தோடு தம் விரகங்களை மறந்தே பதினெட்டு வருடங்கள் வாழ்ந்து விட்ட எங்களின் பெண்களின் துயர்களை மறக்கச் சொல்கின்றதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?

வந்த புலமைப்பரிசில் பணத்தில் வாங்குவதற்கென்று கனவு கண்டு வைத்திருந்த எல்லாவற்றையும் காற்றோடே போக விட்டு விட்டு ஜனாசாவான பத்து வயது இளஞ் சுஹதாக்களின் பதிவுகளைக் காற்று எப்படி மறக்க விடும்?
வயதுக்கு முடியாமல் போய்விட்ட பின்பும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் வாப்பாக்கள் யாருமறியாமல் தன் மகனின், அவனின் துணையின் இல்லாமைக்காய் ஏங்குவதையும் நேரம் கிடைக்கு போது அழுது கொள்வதையும் எப்படி மறுத்து விட முடியும்?
வருடா வருடம் இதே திகதியில் எல்லோரும் கடைகள் வீதிகள் என எல்லாவற்றையும் அமைதிப்படுத்திவிட்டு பள்ளியில் கூடுவதற்கும், அழுது, துஆக்கேட்டு, குர்ஆன் ஓதி கலைவதற்குக் காரணத்தையும், அதன் கதைகளையும் மூத்தம்மாவிடம் கேட்டறிவதை விட்டும், உங்களின் போராட்டத்தின் மீது நான்கு வயதிலிருந்தே கொலைகார முத்திரை பதிந்து விடுவவதை விட்டும் எங்களின் சிறுவர்களை போராட்டத்தினால் என்ன செய்து நிப்பாட்டி விட இயலும் இனி..

நாங்கள் அரசியல் கொண்டவர்கள்
எங்களின் நிலங்களில் பூர்வீகம் கொண்டவர்கள்
எங்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல் செய்பவர்கள்
என்ற உரத்த உண்மைகளோடு ஆயிரம் வரலாறுகளாக, ஆயிரமாயிரம் பேரின் இல்லாமைக்ளுக்கான காரணமாக அந்த பள்ளியில் வந்து சுட்டது ஆகிவிட்டிருக்கிறது இப்போது...

ஒரு பிரம்மாண்டமான வராலாற்றின் மீது அவர்கள் தவறிழைத்திருக்கிறார்கள்.
சத்தியமாக எங்களின் வரலாறு வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஆதியிலிருந்து நீள்கிற அதன் தொடரில் இந்தப் பள்ளிகளைச் சூழ்ந்த பதிவுகளும் தம்மை இணைத்து விட்டிருக்கின்றன என்பதே உண்மை.
எப்படியேனும் இந்தப் பள்ளிகளின் அழுகுரல்களின் வலிமை மிகப் பொல்லலாதது.
துப்பாக்கிகளை விடவும் வரலாற்றில் பலம் கொண்டவை.

அதை உயிர்ப்படுத்துகின்ற வகையில் நாங்கள் அதிலிருந்து கேட்கத் தொடங்கியிருக்கின்ற கேள்விகளும் வலிமை மிக்கன.
எங்களின் மீதான இத்தகைய ஆயிரம் அழிவுகளிருக்கின்றன.அதன் நேரடிப் பாதிப்புகளை உறிஞ்சி வளரும் ஆயிரமாயிரம் தலைமுறைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
அவர்களின் மீதான இத்தனை கேள்விகளையும்,

எங்களின் இருப்பையும், பூர்வீகத்தையும், உரிமைகளையும் "மறந்து விடுவோம்" என்கின்ற வெறும் கபட வார்த்தை அரசியல் ஒன்றால் மட்டும் புறக்கணித்தபடி அவர்களால் எப்படி வென்று கொள்ள இயலும் மனிதர்களுக்கும் மனிதத்துக்குமான தேசம் ஒன்றை.....

03-08-2008

No comments: